உங்க கண்ணுல ஏன் சார் இதெல்லாம் பட மாட்டேங்குது!
சென்னை: சிறப்பாக செயல்பட்டவர்களை கவுரவிக்கும் வகையில், கேபினட் அமைச்சர் பதவி தந்துள்ளா பிரதமர் நரேந்திர மோடி. திறமைக்கு எப்போதும் மரியாதை உண்டு; எதிலும் பாரபட்சம் கிடையாது என்று அரசு கூறி வருகிறது.
பிளஸ்2வில் நல்ல மதிப்பெண் எடுத்தும், மருத்துவம் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில், மாணவி அனிதா தற்கொலை செய்தது, ஆட்சியாளர்களுக்கு எதிராக சுழற்றப்பட்ட சாட்டையாகும்.
திறமை உள்ளவர்களை ஊக்குவிக்கும்போது, அவர்களுடைய செயல்பாடு மேலும் அதிகரிக்கும். பரிசுகள், விருதுகள் வழங்குவது, அவர்களுடைய திறமைக்கு அளிக்கும் அங்கீகாரமாகும்.

கொண்டாட வேண்டாமா
ஒரு விளையாட்டில், தொடர்ந்து, 18 ஆண்டுகள் விளையாடுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதிலும் தொடர்ந்து ஓடிக் கொண்டே இருக்க வேண்டிய கூடைப்பந்து விளையாட்டில். பெண் ஒருவர் இந்த சாதனையை புரிந்துள்ளபோது அவரை நாம் கொண்டாட வேண்டாமா?

அனிதா பால்துரை
சென்னையில் பிறந்த, 32 வயதாகும் இந்திய கூடைப்பந்து அணியின் கேப்டன் அனிதா பால்துரை, 18 ஆண்டுகளாக தேசிய அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த மாதம் நடந்த ஆசிய கூடைப்பந்து சாம்பியன் போட்டியில் இந்தியா கோப்பையை வென்றது. இதற்கு முக்கிய காரணம் கேப்டன் அனிதா பால்துரை.

சாதனை வீராங்கனை
உலகின் மிகச் சிறந்த 10 வீராங்கனைகளில் ஒருவராக 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் நடந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்டவர். எட்டு முறைக்கும் மேல் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கலந்து கொண்ட ஒரே இந்திய வீராங்கனையும் இவர்தான்.

தொடர்ந்து புறக்கணிப்பு
இதுபோல் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், தேசிய விளையாட்டு விருதுகளில் மட்டும் தொடர்ந்து புறக்கணித்து வரப்பட்டார். இந்த ஆண்டு உங்களுக்கு அர்ஜூனா விருது கிடைக்கும் என்று சொல்லியே, பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்துள்ளனர்.

கேட்டுப் பெற வேண்டிய நிலை
நமது திறமைக்கான அங்கீகாரத்தை கேட்டு பெற வேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். இந்த ஆண்டு கண்டிப்பாக கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், அவருடைய பெயர் இடம்பெறவில்லை. வேறு வழியில்லாமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த சாதனை வீராங்கனைக்கு அர்ஜூனா விருது வழங்குவது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புரியாத புதிர்
நாட்டில் திறமையுள்ளவர்கள் உள்ளனர். ஆனால், விளையாட்டு துறை அதிகாரிகளின் கண்களுக்கு மட்டுமே எப்படி அவர்கள் படாமல் போய்விடுகிறார்கள் என்பதுதான், புரியாத புதிராக உள்ளது. ஒருவேளை கண்ணை மூடிக் கொண்டு வேலை செய்கிறார்களா என்பது தெரியவில்லை. இனியாவது மத்திய அரசு கண்ணைத் திறக்குமா?


Click it and Unblock the Notifications