1 நிமிடத்திற்குள் ஓடி தங்கம் வென்ற அஞ்சு.. ஆசிய பாரா 400 மீட்டரில் இந்திய மங்கையர் சாதனை
நகோயா: ஜப்பான் நாட்டின் நகோயா நகரில் உள்ள மிஸுஹோ பார்க் தடகள மைதானத்தில் நடைபெற்று வரும் 2026 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனைகள் பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளனர். டி47 பிரிவில் களம் கண்ட இந்தியாவின் இளம் புயல் அஞ்சு பம்பாடியா தங்கப் பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீராங்கனையான ஜெயந்தி பெஹரா வெள்ளிப் பதக்கத்தையும் தட்டிச் சென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், குஜராத்தைச் சேர்ந்த அஞ்சு தொடக்கம் முதலே மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தார். பந்தய தூரத்தை வெறும் 59.97 வினாடிகளில் கடந்து, 1 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் இலக்கை எட்டிய ஒரே வீராங்கனையாக தங்கப் பதக்கத்தை வென்றார். அவரைத் தொடர்ந்து ஒடிசாவைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை ஜெயந்தி பெஹரா 1 நிமிடம் 00.65 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தாய்லாந்து வீராங்கனை இந்தாச்சோட் சசிராவன் 1 நிமிடம் 02.58 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார்.

தங்கப் பதக்கத்தை வென்றதன் மூலம், நடப்பு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி வென்ற ஜெயந்தி பெஹரா, சிறு வயதில் ஏற்பட்ட தீக்காயங்களைத் தாண்டி சர்வதேச அளவில் பல சாதனைகளைப் படைத்தவர். அவருடன் இணைந்து இளம் வீராங்கனை அஞ்சுவும் தங்கம் வென்று, ஒரே போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்து இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்களை பெற்றுத் தந்தனர்.
வில்வித்தையில் சீத்தல் தேவி இரட்டைத் தங்கம் வென்றதைத் தொடர்ந்து, தடகளத்திலும் இந்திய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். ஒரே போட்டியில் இந்தியாவின் இரண்டு நட்சத்திரங்கள் தங்கம், வெள்ளி என 2 பதக்கங்களையும் அள்ளிக் குவித்து வரலாறு படைத்துள்ளது. தொடர் வெற்றிகளால் ஆசிய பாரா பதக்கப் பட்டியலில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.


Click it and Unblock the Notifications

