சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்.. ஜெயிக்க வேண்டிய போட்டி.. ஆனால் அர்ஜுனிடம் வீழ்ந்த உலக சாம்பியன் குகேஷ்
சென்னை: 2026 சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில், ஜெயிக்க வேண்டிய போட்டியில் உலக சாம்பியன் குகேஷ், மற்றொரு முன்னணி இந்திய வீரரான அர்ஜுன் எரிகைசியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். திங்கட்கிழமை நடைபெற்ற 5வது சுற்று போட்டியில் குகேஷ் மற்றும் அர்ஜுன் எரிகைசி மோதினர். ஆட்டத்தின் 23வது நகர்த்தலின் போது குகேஷ் வெற்றி பெறுவது போல சாதகமான நிலையில் இருந்தார். ஆனால், அர்ஜுனின் சிறப்பான தற்காப்பு ஆட்டத்தால் போட்டி டிராவை நோக்கி நகர்ந்தது.
அதன்பின் கடுமையான நேர நெருக்கடியில் சிக்கிய குகேஷ், 54வது நகர்த்தலின் போது பெரிய தவறை செய்தார். இந்தத் தவறை சரியாகப் பயன்படுத்திய அர்ஜுன் ஆட்டத்தை தன்வசமாக்கினார். அர்ஜுனை விட ஒரு கூடுதல் ரூக் மற்றும் இரண்டு சிப்பாய்கள் இருந்தபோதிலும், குகேஷால் ஆட்டத்தை மீட்க முடியவில்லை. இறுதியில் 63வது நகர்த்தலில் குகேஷ் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்திலிருந்து விலகினார்.

இந்தத் தோல்வியின் மூலம், 5 சுற்றுகள் முடிவில் குகேஷ் வெறும் 1.5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே 2வது சுற்றில் அலிரேசா பிரௌஸ்ஜாவிடம் தோல்வியடைந்திருந்தார். அதே நேரத்தில், குகேஷை வீழ்த்திய அர்ஜுன் எரிகைசி 3.5 புள்ளிகளுடன் அலிரேசாவுடன் இணைந்து முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
குகேஷ் தனது அடுத்த போட்டியில் செவ்வாய்க்கிழமை பிரணேஷ் உடனும், தனது கடைசி போட்டியில் அமெரிக்காவின் ஹான்ஸ் நிமேனுடனும் மோத உள்ளார். அர்ஜுன் எரிகைசி தனது அடுத்த சுற்றில் தனது நெருங்கிய நண்பரான நிஹால் சாரினை எதிர்கொள்ள உள்ளார். இவர்கள் இருவருமே பயிற்சியாளர் ஸ்ரீநாத் நாராயணனிடம் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த தொடரில் குகேஷின் இந்த சரிவு செஸ் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
