ஆசிய விளையாட்டு-அதிக பதக்கங்கள் வென்று இந்தியா சாதனை-தங்கம் 14

இன்று இந்திய விளையாட்டுத் துறைக்கு முக்கிய நாள். இந்திய ஆடவர் மற்றும் மகளிர் கபடி அணிகள் அடுத்தடுத்து தங்கம் வென்று இந்தியர்களை குஷிப்படுத்தின. மேலும் தடகளத்திலும் இந்தியா தங்கத்தை அள்ளியது. இன்று ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை அள்ளியது இந்தியா.
ஆசிய விளையாட்டுப் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பதக்க வேட்டையை முடுக்கி விட்டுள்ளது இந்தியா. நேற்று வரை 10 தங்கப் பதக்கங்களை வென்றிருந்த இந்தியா, இன்று ஒரே நாளில் 4 தங்க்ப் பதக்கங்களைத் தட்டிச் சென்றது.
மகளிர் கபடிக்கு முதல் தங்கம்
முதலில் மகளிர் கபடி அணி மூலம் 11வது தங்கத்தை வென்றது இந்தியா.
தாய்லாந்து அணியுடன் இன்று இந்தியா கபடி இறுதிப் போட்டியில் மோதியது. இப்போட்டியில், 28-14 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா அபாரமாக வென்றது.
இந்த ஆசிய போட்டியில்தான் முதல் முறையாக மகளிர் கபடி போட்டி அறிமுகமாகியுள்ளது. முதல் தொடரிலேயே தங்கத்தை வென்று விட்டது இந்தியா. ஆடவர் கபடிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டபோதும் இந்திய அணியே தங்கம் வென்று இதுவரை தொடர்ந்து தங்கத்தை தக்க வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் அணிக்கு 6வது தங்கம்
அடுத்து ஆடவர் கபடி அணி, இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 37-20 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.
இது இந்திய ஆடவர் கபடி அணிக்கு கிடைத்துள்ள 6வது தொடர் தங்கமாகும். மேலும் கபடி போட்டி அறிமுகமானதிலிருந்து இதுவரை தொடர்ந்து தங்கத்தை தக்க வைத்து வருகிறது இந்தியா என்பது விசேஷமானது.
மகளிர் ரிலேயில் தங்கம்
இந்தியாவின் 13வது தங்கத்தை மகளிர் 4X400 தொடர் ஓட்ட அணி பெற்றுத் தந்தது. மஞ்சீத் கவுர், சினி ஜோஸ், அஸ்வினி அக்குஞ்சி, மந்தீப் கெளர் ஆகியோர் அடங்கிய இந்த அணி கஜகஸ்தானை இறுதிப் போட்டியில் தோற்கடித்து தங்கம் வென்றது.
விஜேந்தருக்கு தங்கம்
இதேபோல ஆடவர் 75 கிலோ குத்துச் சண்டைப் பிரிவில் இந்தியாவின் விஜேந்தர் சிங், தங்கப் பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டியில் அவர் உஸ்பெகிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.
இது போக மகளிர் 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் பிரீஜா ஸ்ரீதரன் வெள்ளியும், கவிதா ராத் வெண்கலமும் வென்றனர்.
செஸ் போட்டியில் இந்திய ஆடவர் அணி வெண்கலம் வென்றது.
ஆடவர் ஒற்றையர் ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் அனுப் குமார் யாமா வெண்கலம் வென்றார். அதேபோல ஜோடிப் பிரிவில் அனுப் குமார், அவனி பன்சால் ஜோடி வெண்கலம் வென்றது.
இன்று கிடைத்த பதக்கங்களுடன் இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. இதில் தங்கம் 14, வெள்ளி 15, வெண்கலம் 33. ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் இந்தியா அதிக அளவிலான பதக்கங்களை வென்றது இதுவேயாகும்.
இதற்கு முன்பு 1982ல் டெல்லியில் நடந்த போட்டியில் 13 தங்கம், 19 வெள்ளி, 25 வெண்கலத்துடன் 57 பதக்கங்களைப் பெற்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்க வேட்டையாகும்.
குத்துச் சண்டையில் சில தங்கப் பதக்க வாய்ப்பை இந்தியா எதிர்நோக்கியுள்ளது. எனவே இந்த முறை சிறப்பான இடத்தை இந்தியா பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 10வது இடத்தைப் பிடித்திருந்தது. இந்த முறை 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:43 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications