இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்!
சென்னை : ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மூன்றாவது தங்கத்தை வென்று கொடுத்துள்ளார் பி.யூ.சித்ரா.
கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பிடித்த, இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கப்பதக்கம் வென்றார்.

சித்ரா பந்தய தூரத்தை 4 நிமிடம் 14.46 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். அவருக்கு அடுத்த இரண்டு இடங்களை பஹ்ரைன் நாட்டு வீராங்கனைகள் பிடித்து வெள்ளி மற்றும் வெண்கலம் வென்றனர்.
சித்ரா கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் ஆவார். கடும் வறுமைக்கு இடையில், போராடி பயிற்சி பெற்று இன்று தங்கம் வென்றுள்ளார் சித்ரா. 2017ஆம் ஆண்டு இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார்.
முன்னதாக தமிழகத்தின் கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை புரிந்திருந்தார். அவரை தொடர்ந்து சித்ராவும் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றோடு முடிவுக்கு வந்தது. இந்த விளையாட்டுத் தொடரில் இந்தியா மூன்று தங்கம், எட்டு வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தமாக 18 பதக்கங்கள் வென்று நான்காம் இடத்தை பிடித்தது.


Click it and Unblock the Notifications