ஆசிய தடகளம்: தமிழக வீரர் லட்சுமணன் தங்கம் வென்றார்! முதல் நாளில் இந்தியாவுக்கு 7 பதக்கங்கள்!
புவனேஸ்வர்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய தடகளப் போட்டிகளின் முதல் நாளில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது.
22-வது ஆசிய தடகளப் போட்டிகள் ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் கலிங்கா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 45 நாடுகளின் 800 வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் 95 வீரர், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

முதல்நாளில் பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் தங்கப் பதக்கம் வென்றார். அவரைத் தொடர்ந்து ஆண்களுக்காக 5,000 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 14 நிமிடம் 54.48 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்த தமிழக வீரர் லட்சுமணன் தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

பெண்களுக்காக 5,000 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சஞ்சீவனி வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான வட்டு எறிதலில் விகாஸ் கவுடாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் நீனா வெள்ளி, நயனா ஜேம்ஸ் வெண்கலம் வென்றனர். பெண்களுக்கான ஈட்டி எறிதலில் அனு ராணி வெண்கலம் வென்றார். ஆசிய தடகளப் போட்டிகளில் முதல் நாளில் இந்தியாவுக்கு 2 தங்கம் உட்பட 7 பதக்கங்கள் கிடைத்தன.


Click it and Unblock the Notifications