ஆசிய விளையாட்டு : மகளிர் 100மீட்டர் ஓட்டத்தில் டுட்டீ சந்த் வெள்ளி… நூலிழையில் தங்கத்தை தவறவிட்டார்
ஜகார்த்தா : இந்தியா சார்பில் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கு பெற்ற டுட்டீ சந்த் இறுதிப் போட்டியில் வெள்ளி வென்றார். இது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று தடகளத்தில் கிடைத்த மூன்றாவது பதக்கம்.
மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் டுட்டீ சந்த் போட்டி தூரத்தை 11.32 வினாடிகளில் கடந்தார். முதல் இடத்தை பிடித்த பஹ்ரைனின் ஒடியோங் 11.30 வினாடிகளிலும், மூன்றாம் இடம் பிடித்த சீனாவின் வேய் யோங்க்லி 11.33 வினாடிகளிலும் 100 மீட்டர் ஓட்டத்தை நிறைவு செய்தனர். டுட்டீ சந்த் 0.02 வினாடி வித்தியாசத்தில் தங்கத்தை தவற விட்டார்.

இன்று தடகளத்தில் மட்டும் இந்தியாவிற்கு மூன்று வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. நேற்று தடகளத்தில், ஷாட் புட் பிரிவில் தாஜிந்தர்பால் சிங் தங்கம் வென்றார். ஒட்டுமொத்தமாக இந்தியா இதுவரை 36 பதக்கங்கள் வென்றுள்ளது. அதில் தங்கப் பதக்கம் ஏழு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மிக முக்கியமாக தடகளப் பிரிவில் ஒரு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆடவர் 10000 மீட்டர் பிரிவில் தமிழகத்தின் லக்ஷ்மணன் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்று வரலாற்று சாதனை ஒன்றையும் நிகழ்த்தினார். எனினும், அவர் ஓடும் போது தன் பாதத்தை ஒரே ஒரு முறை வெள்ளைக் கோட்டுக்கு வெளியே வைத்தார். அதை காணொளிக் காட்சியில் கண்ட போட்டி நடுவர்கள் அவரை தகுதி நீக்கம் செய்து வெண்கலத்தை நான்காவதாக வந்த சீன வீரருக்கு வழங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications