ஆசிய விளையாட்டு : ஹீமா தாஸ், முகம்மது ஏனாஸ் 400மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றனர்… ஹீமா தேசிய சாதனை
ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் சில நிமிட இடைவெளியில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றுள்ளது. இதில் முக்கியமாக மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில் ஹீமா தாஸ் வெள்ளி வென்றார். அடுத்த சில நிமிடங்களில் ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் முஹம்மது ஏனாஸ்-உம் வெள்ளி வென்றார். பிரிட்ஜ் போட்டிகளில் இரண்டு வெண்கலமும் கிடைத்துள்ளது.
ஹீமா தாஸ் ஏற்கனவே சில மாதங்கள் முன் உலக சாதனை புரிந்து இந்தியா முழுவதும் பிரபலமானார். இதனால், அவர் பங்கேற்ற 400 மீட்டர் ஓட்டத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அதை பூர்த்தி செய்யும் வகையில், அந்த போட்டியில் இரண்டாம் பிடித்து இந்தியாவிற்கு வெள்ளி பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

இந்த போட்டியில் தன் முந்தைய சாதனை நேரமான 51 வினாடிகளை, முறியடித்து 50.79 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து தேசிய சாதனை படைத்தார். மகளிர் 400 மீட்டர் ஓட்டத்தில், பஹ்ரைனின் நசீர் சல்வா முதல் இடமும், கஜகஸ்தானின் மிகினா எலினா மூன்றாம் இடமும் பிடித்தனர்.
ஆடவர் 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் முகம்மது ஏனாஸ் 45.69 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து இரண்டாம் பிடித்தார். அவரும் வெள்ளி பதக்கத்தை வென்றார். இதே போட்டியில் பங்கு பெற்ற இந்தியாவின் ஆரோக்யா ராஜீவ் 0.14 வினாடிகளில் மூன்றாம் இடத்தையும், வெண்கலப் பதக்கத்தையும் இழந்து நான்காம் இடம் பிடித்தார்.

இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் முதல் புதிதாக சேர்க்கப்பட்ட பிரிட்ஜ் என்ற விளையாட்டில் இந்தியாவின் ஆடவர் அணியும், கலப்பு அணியும் வெண்கலம் வென்றுள்ளனர்.
இன்று காலை ஈகுவெஸ்டேரியன் விளையாட்டில் இரண்டு வெள்ளி பதக்கங்கள் கிடைத்தன. தற்போது வென்ற நான்கையும் சேர்த்து இந்தியா இன்று ஆறு பதக்கங்கள் வென்றுள்ளது.


Click it and Unblock the Notifications