ஆசிய விளையாட்டு : இந்தியாவின் பதக்கங்களை அதிகரித்த வுஷு… அரைமணி நேரத்தில் நான்கு வெண்கலம்
ஜகார்த்தா: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வுஷு அரையிறுதி இன்று நடைபெற்றது. அடுத்தடுத்து நடந்த இந்த போட்டிகளில் இந்தியாவின் நான்கு வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் அரை மணி நேர அவகாசத்தில் அடுத்தடுத்த போட்டிகளில் வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை உயர்த்தியுள்ளனர்.
ரோஷிபினா தேவி, சந்தோஷ் குமார், மூன்றாவதாக சூர்ய பானு பிரதாப் சிங், இறுதியாக நரேந்தர் கிரேவால் ஆகியோர் வுஷு அரையிறுதியில் பங்கேற்று வெண்கலம் வென்றனர்.

காலிறுதியில் வென்ற அவர்கள் நால்வரும் தோற்றாலும் பதக்கம் உறுதி என்ற நிலை இருந்தது. அவர்கள் அனைவரும் அரையிறுதியில் தோல்வி அடைந்தனர். அதனால், வெண்கலத்தோடு திருப்தி அடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இவர்களில் யாரும் அரையிறுதியில் ஒரு புள்ளி கூட பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்களில் ஒருவராவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தால் வெள்ளி அல்லது தங்கம் வெல்லும் வாய்ப்பை பெற்று இருக்கலாம்.
இந்த நான்கு வுஷு வெண்கலங்களோடு சேர்த்து இந்தியா தற்போது பதினைந்து பதக்கங்கள் வென்றுள்ளது. அதில் நான்கு தங்கம், மூன்று வெள்ளி, எட்டு வெண்கலம் அடங்கும்.


Click it and Unblock the Notifications