ஆசிய விளையாட்டுப் போட்டி 6ஆம் நாள் - ஒரு தங்கம், ஒரு வெள்ளி வென்ற இந்தியா
ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
ஆறாவது நாளான இன்று இந்தியா துப்பாக்கி சுடுதலில் ஒரு தங்கப் பதக்கம் மற்றும் வுஷு விளையாட்டில் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று இருக்கிறது.

வுஷூ மகளிர் 60 கிலோ எடைப் பிரிவில் இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை ரோஷிபினா தேவி, சீனாவின் வூ ஜியோவெய்யை எதிர்த்து விளையாடினார்.
இந்த போட்டியில் ரோஷிபினா தேவி தங்கம் வெல்வார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வெள்ளிப் பதக்கம் மட்டுமே வென்றார்.
முதல் சுற்றில் 1-0 என்ற புள்ளி கணக்கில் வூ வெற்றி பெற்றார். இரண்டாம் சுற்றில் துவக்கத்தில் ரோஷிபினா தேவி முன்னிலை வகித்தார். அதனால் அவர் தங்கம் வெல்வார் என்ற நம்பிக்கை தொடர்ந்தது.
ஆனால், இறுதியில் வூ வெற்றி பெற்றார் என நடுவர்கள் அறிவித்தனர். இந்தியாவின் ரோஷிபினா தேவிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது. 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவர் வெண்கலம் வென்று இருந்தார். தற்போது அவர் வெள்ளி பதக்கம் வென்று இருக்கிறார்.
துப்பாக்கி சுடுதல்: ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா தங்கம் வென்றது.
சரப்ஜோத் சிங், ஷிவா நர்வால் மற்றும் அர்ஜுன் சிங் சீமா ஆகிய இந்திய வீரர்கள் மூவரும் மொத்தம் 1734 புள்ளிகள் பெற்றனர். ஒரு புள்ளி வித்தியாசத்தில் சீனாவை வீழ்த்தி தங்கம் வென்றனர். வியட்நாம் 1730 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது.
இந்தப் போட்டியில் சரப்ஜோத் 580 புள்ளிகள் மற்றும் அர்ஜுன் 578 புள்ளிகள் பெற்று முறையே 5வது மற்றும் 8வது இடத்தைப் பிடித்து, தனிநபர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். அதிலும் அவர்கள் வென்றால் மேலும் பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றொரு வீரர் சிவன் (576) 14வது இடத்தையே பிடித்தார்.
இத்துடன் இந்தியா 6 தங்கம், 8 வெள்ளி மற்றும் 10 வெண்கலப் பதக்கங்கள் வென்று பதக்கப் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications