Asian Games 2023 : ஒரே நாளில் சுட்டுத் தள்ளிய இந்தியா.. துப்பாக்கி சுடுதலில் 2 தங்கம்.. 2 வெள்ளி!
ஹாங்சோ : ஹாங்சோவில் நடைபெற்று வரும் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை குழு துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது.
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ஸ்வப்னில் குசலே மற்றும் அகில் ஷியோரன் ஆகியோர் 1769 புள்ளிகளுடன் புதிய உலக சாதனை செய்து, அத்துடன் தங்கப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்திய அணி இந்தப் போட்டியில் 1761 புள்ளிகளுடன் அமெரிக்காவின் முந்தைய உலக சாதனையை முறியடித்தது. சீனா மொத்தம் 1763 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றது, கொரியா மொத்தம் 1748 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றது.
இது 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் 15வது பதக்கம் ஆகும்.
முன்னதாக பெண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி ஈஷா சிங், திவ்யா டிஎஸ் மற்றும் பாலக் ஆகியோர் துப்பாக்கி சுடுவதில் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றனர்.
மொத்தம் 1731 புள்ளிகளுடன், இந்தியா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றது. 1736 புள்ளிகளுடன் சீனா தங்கம் வென்றது. சீன தைபே 1723 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்தது.
10 மீட்டர் ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் இந்தியா 1-2 என்ற கணக்கில் இறுதிப் போட்டியில் பாலக் மற்றும் ஈஷா முறையே தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ஆக, ஆசிய விளையாட்டில் ஏழாம் நாளான இன்று இதுவரை இந்தியா துப்பாக்கி சுடுதலில் இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளியை வென்றுள்ளது.
அது மட்டுமின்றி ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சாகேத் மைனேனி மற்றும் ராம்குமார் ராமநாதன் வெள்ளிப் பதக்கம் வென்றனர். அவர்கள் சீன தைபேயின் ஜங் ஜேசன் மற்றும் யு-சியோ ஜோடியிடம் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து வெள்ளிப் பதக்கம் மட்டும் வென்றனர்.


Click it and Unblock the Notifications