மும்பை : ஆசிய விளையாட்டு போட்டி நாளை முதல் சீனாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்க இருக்கிறது. ஏற்கனவே சில விளையாட்டின் முதல் சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தற்போது அடிக்கடி எல்லை பிரச்சினை தொடர்பாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வருகிறது.

மேலும் அண்மையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சில பகுதிகள் பெயரை சீனா மாற்றியது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் உசு மல்யுத்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி சீனாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இதில் மூன்று பேருக்கு சீன அரசு விசா அனுமதி வழங்கவில்லை. இதற்கு காரணம் விசா வழங்கப்படாத மூன்று வீரர்களும் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.
அருணாச்சல பிரதேசத்தை எங்களது பகுதி என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது.இந்த நிலையில் அவர்களை இந்திய வீரர்கள் என்ற அடையாளத்தை அளிக்க சீனா மறுத்துவிட்டது. மேலும் அருணாச்சல பிரதேசத்தை பிரச்சனைக்குரிய இடமாக கருதி அந்தப் பகுதி வீரர்களுக்கு மட்டும் விசா வழங்காமல் சீனா மறுத்துவிட்டது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், சீனாவின் இந்த போக்கு முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்து இருக்கிறதும் அருணாச்சல பிரதேசம் எப்போதுமே இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று குறிப்பிட்டுள்ள மத்திய அரசு உடனடியாக இந்திய வீரர்களுக்கு விசா வழங்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் சீனாவின் இந்த முடிவால் ஆசிய போட்டியில் இருந்து விலகி விடலாமா என்ற முடிவில் இந்தியா இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி இந்தியா ஆசிய போட்டியை புறக்கணிக்கும் பட்சத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை சீனாவுக்கு ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.