இந்தியாவுக்கு அடுத்தடுத்து 2 பதக்கம்.. ஆசிய விளையாட்டுப் போட்டியில் முதல் நாளே கலக்கிய ஐவர்!
ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா முதல் பதக்கம் வென்றது. துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் 10 மீட்டர் ரைஃபிள் மகளிர் குழு பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
இதுவே இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கம் ஆகும்.
இதை அடுத்து படகோட்டுதல் விளையாட்டில் லைட்வெயிட் ஆடவர் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில் மற்றொரு வெள்ளி வென்றது இந்தியா.

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது.
நேற்று மாலை முதல் அதிகாரப்பூர்வமாக துவங்கிய ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா முதல் பதக்கத்தை வென்றது.
ரமிதா, மெஹுளி கோஷ், ஆஷி சௌக்சி ஆகியோர் துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் 10 மீட்டர் ரைஃபிள் மகளிர் குழு பிரிவில் கூட்டாக பங்கேற்றனர்.
அவர்கள் தகுதிச் சுற்றில் ஒட்டு மொத்தமாக 1886 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தனர். அதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

சீனா 1896.6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து தங்கம் வென்றது. மங்கோலியா 1880 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வென்றது.
இதே சுற்றில் ரமிதா 631.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்தும், மெஹுலி 630.8 புள்ளிகளுடன் 5வது இடம் பிடித்தும், தனிநபர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஆஷி (623.3) 29வது இடம் பிடித்தார். அதன் காரணமாக அவர் தனி நபர் சுற்றுக்கு தகுதி பெறவில்லை.
படகோட்டுதல் விளையாட்டில் லைட்வெயிட் ஆடவர் இரட்டை ஸ்கல்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற அர்ஜூன் லால் ஜாட் மற்றும் அரவிந்த் சிங் 6:28.18 வினாடிகளில் இலக்கை எட்டி வெள்ளி வென்றனர். சீனா 6:23.16 வினாடிகளில் தங்கம் வென்றது, உஸ்பெகிஸ்தான் 6:33.42 விவினாடிகளில் இலக்கை எட்டி வெண்கலம் வென்றது.


Click it and Unblock the Notifications