அட யாருப்பா இந்த கிரண் பலியான்? 72 ஆண்டுகளுக்கு பின் குண்டு எறிதலில் பதக்கம்.. இந்தியாவின் பெருமை!
ஹாங்சோ : 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெண்களுக்கான குண்டு எறிதல் விளையாட்டில் இந்தியாவின் கிரண் பலியான் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இது 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வெல்லும் 33வது பதக்கம் ஆகும். இதில் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், 72 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவே.

குண்டு எறிதல் போட்டியில் 24 வயது இந்திய வீராங்கனையான கிரண் பலியான் 17 புள்ளி 36 மீட்டர் தூரம் வீசி இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்துள்ளார்.
கிரண் பலியான் எவ்வாறு குண்டு எறிதல் போட்டிகளை ஆடத் துவங்கினார் என்பது சுவாரசியமானது. அவர் பள்ளி நாட்களில் பல தடகள விளையாட்டுக்களில் கலந்து கொண்டு வந்துள்ளார். அப்போது ஒருமுறை கிரணின் பெயரை தவறுதலாக மண்டல அளவிலான குண்டு எறிதல் போட்டியில் சேர்த்து விட்டனர். அதில் மூன்று பேர் மட்டுமே கலந்து கொண்டதால் ஆர்வமின்றி கலந்து கொண்ட கிரணுக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.
அதன் பின்னரே அவர் குண்டு எறிதல் பயிற்சிகளை எடுத்துக் கொண்டு தற்போது இந்தியாவுக்கு 72 ஆண்டுகளுக்கு பின் பெருமை தேடித் தந்துள்ளார்.
கடந்த 1951ல் நடந்த முதல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டியில், பார்பரா வெப்ஸ்டர் வெண்கலம் வென்றிருந்தார். அவர் மும்பையை சேர்ந்த ஆங்கிலோ-இந்தியர் ஆவார். அந்த வகையில் தற்போது இந்தியர் ஒருவர் பதக்கம் வென்றுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக ஐந்தாவது இடத்தைப் பிடித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications