மும்பை : ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ராவை நடுவர்கள் ஏமாற்ற நினைத்ததால் சர்ச்சை எழுந்தது. இதனால் போட்டி பத்து நிமிடம் வரை தடைப்பட்டது.
சீனாவின் ஹாங்சோ நகரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் நீரஜ் சோப்ரா 88. 88 மீட்டர் தூரம் வரை வீசி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதேபோன்று இரண்டாவது இடத்தில் இந்திய வீரர் கிஷோர் குமார் 8 7. 54 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். இந்த நிலையில் இந்த போட்டி தொடங்கிய போது நீரஜ் சோப்ரா முதல் முயற்சியில் அதிக தூரம் வீசி வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தார். ஆனால் நீரஜ் சோப்ரா வீசியதை கணக்கில் எடுத்துக் கொள்ள நடுவர் மறுத்துவிட்டார்.
அதற்கு காரணம் வீரர் எவ்வளவு தூரம் ஈட்டியை எறிந்தார் என்று தூரத்தை கணக்கிடும் கருவி சரியாக வேலை செய்யவில்லை என்பதால் நீரஜ் சோப்ரா வீசியதை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று அறிவித்தார்.இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீண்டும் நீரஜ் சோப்ராவை வீச சொல்லி நடுவர்கள் அறிவுறுத்தினர்.
எப்போதுமே ஈட்டி எறிதலில் முதல் இரண்டு முறை அதிக தூரம் வீசிவிட்டால் மீண்டும் அதனை முறியடிப்பது மிகவும் கடினம். ஏனென்றால் உடல் வலு குறைந்து கைகள் சரியாக ஒத்துழைக்காது இதனால் நீரஜ் சோப்ரா வீசியது வீணாகிவிட்டது. இதனை அடுத்து மனிதர்கள் மூலம் அளந்து அளவை அறிவியுங்கள் என்று இந்தியா கோரிக்கை விடுத்தது. எனினும் இதனை நடுவர்கள் மறுத்துவிட்டனர்.
இதற்குக் காரணம் குவைத் வீரர் தனது முதல் முயற்சியில் ஈட்டியை எறிந்து விட்டதால் குழப்பம் ஏற்பட்டு விட்டதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் கடுப்பான நீரஜ் சோப்ரா முதலில் இருந்து ஈட்டி எறிய தொடங்கினார்.தொழில்நுட்பக் காரணங்களால் எழுந்த பிரச்சனை நீரஜ் சோப்ராவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. எனினும் எவ்வளவு தடைகள் இருந்தாலும் அதனை உடைப்பதே சாம்பியன்களின் குணமாகும். அந்த வகையில் நீரஜ் சோப்ரா தாம் ஒரு சாம்பியன் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்.