விளையாட்டால் கல்வி பாதிக்காது.. பலரும் ஸ்போர்ட்ஸ் நோக்கி வரனும்.. போல் வால்டில் சாதித்த பரணிகா
அய்ச்சி: 2026 ஆம் ஆண்டின் தனது சிறப்பான தடகளப் பயணத்தில் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளார் பரணிகா இளங்கோவன். வெள்ளிக்கிழமை நடைபெற்ற அய்ச்சி-நகாயா ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஆசிய விளையாட்டின் போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாற்றைப் படைத்துள்ளார்.
தனது முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 வயதான பரணிகா, நகாயாவில் உள்ள மிகுஹோ பார்க் தடகள மைதானத்தில் 4.15 மீட்டர் உயரத்தைத் தாண்டி, கஜகஸ்தானின் போலினா இவனோவாவுடன் வெண்கலப் பதக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். இரு வீராங்கனைகளும் தலா 4.15 மீட்டர் உயரத்தைத் தாண்டி சமநிலை வகித்ததுடன், மாற்று முயற்சிகளின் (countback) அடிப்படையிலும் ஒரே மாதிரியான புள்ளிகளைப் பெற்றதால், இருவருக்கும் வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டது.

ஜப்பானின் மிசாகி மொரோட்டா 4.55 மீட்டர் உயரத்தைத் தாண்டி புதிய தேசிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். சீனாவின் நியூ சுங்கே 4.50 மீட்டர் உயரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இறுதிப் போட்டியை மிகுந்த நம்பிக்கையுடன் தொடங்கிய பரணிகா, தனது முதல் முயற்சிகளிலேயே 3.85 மீட்டர் மற்றும் 4.00 மீட்டர் உயரங்களை எளிதாகக் கடந்தார்.
4.15 மீட்டர் உயரத்தில் அவருக்கு முதல் சவால் ஏற்பட்டது, இருப்பினும் தனது இரண்டாவது முயற்சியில் அவர் அந்த உயரத்தைக் கடந்தார். பின்னர், இன்னும் கூடுதலான உயரத்தை எட்டும் நோக்கில் 4.25 மீட்டர் கடந்திட அவர் முயன்றார். ஆனால், மூன்று முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவரால் அந்த உயரத்தைத் தாண்ட முடியவில்லை. இதனால் இறுதியாக வரலாற்றுச் சிறப்புமிக்க வெண்கலப் பதக்கத்தை அவர் வென்றார்.
பதக்கம் வென்ற பிறகு myKhel தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், வரலாற்றுச் சாதனை படைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய பரணிகா, அதே சமயம் தனது ஆட்டத்தின் மீது தனக்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு இருந்ததாக கூறியுள்ளார். "தமிழ் மக்களுக்கு வணக்கம். இது இந்தியாவின் முதல் போல் வால்ட் ஆசிய போட்டியில் முதல் பதக்கம். கடினமாக உழைத்தால் அனைவராலும் சாதிக்க முடியும். பதக்கம் வென்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதக்கத்தை எனது பயிற்சியாளர் மில்பர் ரசலுக்கு அர்ப்பணிக்கிறேன். இன்று நாட்டுக்காக என் சிறந்த பங்களிப்பை தர வேண்டும் என்ற குறிக்கோளில் விளையாடினேன்."
"ஆனால் இன்றைய எனது ஆட்டத்திறன் எனக்கு சற்று ஏமாற்றமளிக்கிறது, ஏனெனில் நான் 4.30 மீட்டர் உயரத்தைக் குறிவைத்தேன், ஆனால் 4.15 மீட்டர் மட்டுமே தாண்ட முடிந்தது. இருப்பினும், எனது அடுத்த போட்டிகளுக்கு நான் இன்னும் தீவிரமாகத் தயாராவேன்," என்று அவர் கூறினார்.
"இந்த ஆண்டு தமக்கு முன்னேற்றத்தை தரும் ஆண்டாக அமைந்தது. எனது விளையாட்டில் சில யுத்திகளை மாற்றி, குறைகளை சரி செய்தேன். அதற்கான பலன் தற்போது தெரிகிறது. இளைஞர்கள் பலரும் போல் வால்ட் விளையாட்டுக்கு வர வேண்டும். விளையாட்டில் கவனம் செலுத்தினால் படிப்பு போய்விடும் என்று நினைக்க வேண்டாம்."
"கண்டிப்பாக விளையாட்டும் நமக்கு பல முன்னேற்றங்களை தரும். பலரும் விளையாட்டில் இனி கவனம் செலுத்துங்கள். எனக்கு நரோட்டோ கார்ட்டுன் மிகவும் பிடிக்கும். அதை பார்த்தால் எனக்கு உத்வேகம் கிடைக்கும். ஆனால், இங்கு ஜப்பான் மொழியில் தான் கிடைக்கிறது. ஆனால், என்னால் பார்க்க முடியவில்லை. தமிழ் படங்கள் காமெடி அதிகம் பார்ப்பேன். அது எனக்கு மிகவும் பிடிக்கும்." என்று கூறினார்.
2026 ஆம் ஆண்டு பரணிகா புவனேஸ்வரில் நடைபெற்ற தேசிய உள்விளையாட்டு சாநிலியன்ஷிப் போட்டியில் 4.22 மீட்டர் உயரத்தைத் தாண்டி புதிய தேசிய சாதனைப் படைத்ததன் மூலம் இந்த சீசனை அவர் தொடங்கினார். இதன்மூலம், 2022 இல் ரோசி மீனா பால்ராஜ் படைத்திருந்த 4.21 மீட்டர் என்ற முந்தைய இந்திய சாதனையை அவர் முறியடித்தார்.
தனது சொந்த சாதனையை மீண்டும் மேம்படுத்த பரணிகா அதிக காலம் எடுத்துக் கொள்ளவில்லை. சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, புவனேஸ்வரில் நடைபெற்ற இந்தியன் இன்டோர் ஓபன் கம்பைன்ட் ஈவென்ட்ஸ் மற்றும் போல் வால்ட் 2026 போட்டியில் 4.23 மீட்டர் உயரத்தைத் தாண்டி, தேசிய சாதனையில் மேலும் ஒரு சென்டிமீட்டரை அதிகரித்தார்.
புவனேஸ்வரிலேயே நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும் அவரது தொடர் வெற்றி நீடித்தது, அங்கு அவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான தகுதியை உறுதி செய்தார். அவரது இந்த சிறப்பான சீசனில் முக்கியப் பங்கு வகித்த மைதானத்தில், இது மற்றொரு மைல்கல்லாக அமைந்தது.
தற்போது, நகாயாவில் பரணிகா இன்னும் ஒரு படி மேலே சென்றுள்ளார். 4.15 மீட்டர் உயரத்தைக் கடந்ததன் மூலம், ஆசிய விளையாட்டின் போல் வால்ட் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் இலக்கு வைத்த 4.30 மீட்டர் உயரத்தை இந்த வெண்கலப் பதக்கம் எட்டவில்லை என்றாலும், இந்திய தடகள வரலாற்றில் இது ஒரு உன்னதமான சாதனையாகும்.


Click it and Unblock the Notifications


