ஈட்டி எறிதலில் இந்தியாவுக்கு டபுள் பதக்கம்.. வெள்ளி வென்ற யாஷ்வீர் சிங்.. ரோஹித் யாதவுக்கு வெண்கலம்
நகோயா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு ஒரே போட்டியில் 2 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்துள்ளனர். இந்திய வீரர் யாஷ்வீர் சிங் வெள்ளிப் பதக்கத்தையும், ரோஹித் யாதவ் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றி அசத்தினர். நீரஜ் சோப்ரா காயம் காரணமாக ஆசிய விளையாட்டில் பங்கேற்காத நிலையில் மற்ற இரு இந்திய வீரர்களும் இரண்டு பதக்கங்களை இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளனர்.
ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் தொடக்கம் முதலே பரபரப்பு இருந்தது. மழை பெய்து இருந்த ஓடுதளத்தில் கீழே விழுந்து விடாமல் அனைத்து வீரர்களும் கவனமாகவே தங்கள் எறிதல் வாய்ப்புகளை பயன்படுத்தினர்.
இதில் இந்திய வீரர் யாஷ்வீர் சிங் தனது 6வது மற்றும் கடைசி முயற்சியில் ஈட்டியை 85.72 மீட்டர் தூரத்திற்கு எறிந்து புதிய தனிநபர் சாதனையை படைத்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார் மற்றொரு இந்திய வீரரான ரோஹித் யாதவ் தனது சிறந்த முயற்சியாக 84.68 மீட்டர் தூரம் வீசி 3வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

இலங்கை வீரருக்கு தங்கம் - அர்ஷத் நதீமுக்கு ஏமாற்றம்
இந்த போட்டியில் இலங்கை வீரர் ருமேஷ் பதிராகே கடைசி வாய்ப்பில் ஈட்டியை 88.55 மீட்டர் தூரத்திற்கு எறிந்து தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார். பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் அர்ஷத் நதீம் 80.29 மீட்டர் மட்டுமே எறிந்து 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு பதக்க வாய்ப்பை இழந்தார். ஈட்டி எறிதல் களத்தில் ஒரே நேரத்தில் 2 இந்திய வீரர்கள் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
