வில்வித்தையில் 4வது தங்கம்.. வரலாறு படைத்து இந்திய மகளிர் ரீகர்வ் அணி.. கொரிய சாம்ராஜ்யம் காலி
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி வில்வித்தையில் இந்திய மகளிர் ரீகர்வ் அணி, 10 முறை சாம்பியனான பலம் வாய்ந்த தென் கொரியாவை 5-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வரலாற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. 1978 ஆம் ஆண்டு முதல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் கோலோச்சி வந்த தென் கொரியாவின் 48 ஆண்டு கால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்திய வீராங்கனைகள் புதிய உலக வரலாறு படைத்துள்ளனர்.
நகோயாவில் உள்ள ஒகசாகி மைதானத்தில் நடைபெற்ற மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் கும்கும், அங்கிதா மற்றும் கீர்த்தி ஆகியோர் அடங்கிய கூட்டணி, தென் கொரியாவின் யுன்ஜி லீ, சேயங் காங் மற்றும் யேஜின் ஓ ஆகியோரை எதிர்கொண்டது.

தொடக்கத்திலிருந்தே இரு அணிகளும் அனல் பறக்க மோதின. முதல் செட்டில் இரு அணிகளும் தலா 54 புள்ளிகள் எடுத்து சமநிலை அடைந்தன (1-1). 2வது செட்டில் கொரிய வீராங்கனைகள் 56 புள்ளிகளை குவித்த நிலையில், இந்திய வீராங்கனை கும்கும் கடைசி வினாடியில் இரண்டு முறை 10 புள்ளிகளை எய்து 56-56 என சமநிலைக்கு கொண்டு வந்தார் (2-2). 3வது செட்டில் 3வது செட்டில் துல்லியமாக அம்புகளை செலுத்திய இந்திய வீராங்கனைகள் 55-51 என்ற கணக்கில் கைப்பற்றி 4-2 என வலுவான முன்னிலை பெற்றனர்.
தங்கத்தை தீர்மானிக்கும் 4வது செட்டில் தென் கொரியா 54 புள்ளிகளை எடுத்தது. இந்திய அணியில் கீர்த்தி மற்றும் அங்கிதா ஆகியோர் தலா 9 புள்ளிகளை எடுத்த நிலையில், கடைசி அம்பை எய்த கும்கும் மீது கடுமையான அழுத்தம் இருந்தது. கடைசி அம்பை மிகத் துல்லியமாக 10 புள்ளிகளுக்குள் செலுத்திய கும்கும், இந்த செட்டை 54-54 என சமநிலைக்கு கொண்டு வந்தார். இதனால் இந்திய அணி 5-3 என்ற செட் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது.
48 ஆண்டு கால வரலாறு தகர்ப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் கடந்த 1978 ஆம் ஆண்டு மகளிர் ரீகர்வ் அணிகள் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன்பின்னர் நடைபெற்ற அனைத்து ஆசிய போட்டிகளிலும் தென் கொரிய அணி மட்டுமே தங்கப் பதக்கத்தை வென்று வந்தது. இதுவரை எந்தவொரு இறுதிப்போட்டியிலும் தென் கொரியா தோற்றதே இல்லை.
அந்த அசைக்க முடியாத ஆதிக்கத்தை தகர்த்து, ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி, முதல் முயற்சியிலேயே தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்று இந்திய விளையாட்டுத் துறைக்கு மாபெரும் பெருமை சேர்த்துள்ளது. வரலாற்று சாதனை படைத்த கும்கும், அங்கிதா, கீர்த்தி ஆகிய சிங்கப்பெண்களுக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications
