மகளிர் டிராப் அணியின் துல்லியமான குறி.. துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி
2026 ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணி அசத்தலாக செயல்பட்டு வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றுள்ளது. மகளிர் டிராப் அணிகள் பிரிவில் இந்திய வீராங்கனைகள் துல்லியமாக இலக்குகளைத் தாக்கி இந்த பதக்கத்தை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகளிர் டிராப் அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா, ஆஷிமா அஹ்லாவத் மற்றும் மனிஷா கீர் ஆகியோர் களமிறங்கினர். இந்திய வீராங்கனைகளில் நீரு தண்டா அபாரமாக சுட்டு 118 புள்ளிகளையும், ஆஷிமா அஹ்லாவத் 106 புள்ளிகளையும், மனிஷா கீர் 104 புள்ளிகளையும் குவித்தனர். இதன் மூலம் இந்திய அணி மொத்தம் 328 புள்ளிகள் பெற்று 2வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.

சீன அணி 346 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. சீன அணியில் லியூ ஷான்ஷான், சன் யுனாங் மற்றும் ஜு ஜிங்யு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
நீரு தண்டா முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். அணிகள் பிரிவில் வெள்ளி வென்றது மட்டுமின்றி, தனிநபர் தகுதிச் சுற்றிலும் இந்திய வீராங்கனை நீரு தண்டா 118 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து மிரட்டியுள்ளார். கத்தார் வீராங்கனை ரே பாசிலுடன் சமநிலை பெற்றுள்ள அவர், தனிநபர் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார்.
நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் களத்தில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருவது விளையாட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications

