Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய போட்டி.. உலகமே திரும்பி பார்க்க போகும் தமிழகத்தின் கடலரசி கமலி.. 17 வயதில் சூப்பர் ஸ்டார்

ஐச்சி: ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அலைச்சறுக்கு விளையாட்டு முதல் முறையாக அறிமுகமாக உள்ளது. ஐச்சி-நகோயாவில் நடைபெறும் இந்த போட்டியில் 17 வயதை நெருங்கும் கமலி மூர்த்தி. நான்கு பேர் கொண்ட இந்திய சர்ஃபிங் அணியில் கமலியும் இடம் பெற்றுள்ளார்.

மாமல்லபுரம் கடலோர பகுதியிலுள்ள ஒரு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த கமலி மற்றும் அவரது தனித்து வாழும் தாய் சுகந்தியின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கை மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தியாவின் மகளிர் ஷார்ட்போர்டு சர்ஃபிங்கில் முதலிடம் வகிக்கும் கமலி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தனக்குக் கிடைக்கப்போகும் இந்த மிகப்பெரிய வாய்ப்பிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

Kamali

இது குறித்து பேசிய கமலி, "இந்த நிலையை அடைய நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். இப்போது என்னை நான் நம்பி, ஒவ்வொரு தருணத்தையும் ரசிக்க வேண்டிய நேரம் இது. என்ன நடந்தாலும், எனது முழுத் திறனையும் வெளிப்படுத்தி நாட்டிற்குப் பெருமை சேர்ப்பேன்" என்று கூறினார்.

தமிழக வீராங்கனை இளவேனில் சாதனை.. நூலிழையில் தங்கம் மிஸ்.. ஆசிய விளையாட்டில் ஒரே நாளில் 2 வெள்ளி

தமிழக வீராங்கனை இளவேனில் சாதனை.. நூலிழையில் தங்கம் மிஸ்.. ஆசிய விளையாட்டில் ஒரே நாளில் 2 வெள்ளி

சர்ஃபிங் விளையாட்டுக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்கனவே ஆதரவளித்து வருகிறது. இந்திய சர்ஃபிங் கூட்டமைப்பு, பயிற்சிகள் மற்றும் போட்டிகளுக்கான வருடாந்திர காலண்டர் திட்டத்தின் கீழ் அரசாங்க நிதி உதவியைப் பெறுகிறது. பெருவில் நடைபெற்ற 2025 ஐஎஸ்ஏ உலக ஜூனியர் சர்ஃபிங் சாம்பியன்ஷிப் மற்றும் சீனாவில் நடைபெற்ற 2025 ஆசிய புரோ-ஆம் சர்ஃப் சீரிஸ் ஆகியவற்றில் பங்கேற்பதற்கான வெளிநாட்டுப் பயணங்களுக்கு கமலிக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

கமலி ஏற்கனவே இளைஞர்களின் அடையாளமாகத் திகழ்கிறார். அவருக்கு ஏழு வயதாக இருந்தபோதே, 24 நிமிடக் குறும்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது. பாலினப் பாகுபாடுகளை உடைத்தெறிந்து போராடும் ஒரு தனித்தாயால் வளர்க்கப்படும் இளம் வீராங்கனை ஒருவரே இந்த ஆவணப்படத்தின் முக்கியக் கதைக் கருவாகும். லண்டனைச் சேர்ந்த நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த சாஷா ரெயின்போ என்பவரால் இந்த ஆவணப்படம் இயக்கப்பட்டது.

பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், 2020 பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகளில் BAFTA குறும்படப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. அத்துடன் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப் பட்டியலிலும் இடம் பெற்றது. வாழ்க்கையில் தடைகளை எதிர்த்துப் போராடுவது கமலிக்கும் அவரது தாய்க்கும் புதிதல்ல. இந்தத் திரைப்படம் ஒரு தனித்தாய் தனது மகளின் முன்னேற்றத்திற்காக ஸ்கேட்போர்டிங் மூலம் போராடியதை அழகாகப் படம்பிடித்துக் காட்டியது.

கமலி தனது மூன்று வயதிலேயே முதன்முதலில் அலைச்சறுக்கு பலகையில் ஏறினார், அதற்கு அவரது மாமாவும் சர்ஃபிங் பயிற்சியாளருமான சந்தோஷ் மூர்த்தி ஒரு துணையாக இருந்தார். சிறுவயது ஆர்வமாகத் தொடங்கிய இந்த விளையாட்டு, படிப்படியாக ஒரு தீவிரமான விளையாட்டுப் பயணமாக மாறியது. 2023-ஆம் ஆண்டு இந்தியன் ஓபன் ஆஃப் சர்ஃபிங் போட்டியில் மகளிர் ஓபன் மற்றும் 16 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் இரண்டிலும் சாம்பியன் பட்டம் வென்றது கமலியின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடி 2024 தேசிய சர்ஃபிங் சாம்பியனானார். மேலும் 2025 இந்தியன் ஓபன் ஆஃப் சர்ஃபிங் போட்டியில் மகளிர் ஓபன் மற்றும் U-16 சாம்பியன் பட்டங்களைத் தக்கவைத்துக் கொண்டார். தொடர்ந்து 2026-இல் லிட்டில் அந்தமான் புரோவில் நடைபெற்ற மகளிர் ஓபன் பிரிவில் வென்றதுடன், NMPA இந்தியன் ஓபன் ஆஃப் சர்ஃபிங் போட்டியில் மகளிர் ஓபன் மற்றும் 18 வயதுக்குட்பட்டோர் ஆகிய இரு பிரிவுகளிலும் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனைகளைத் தொடர்ந்தார்.

மாலத்தீவில் நடைபெற்ற 2024 ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் கால்பதித்த கமலி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் அலைச்சறுக்கு பிரிவில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க தகுதியைப் பெறுவதற்கு தனது சிறப்பான பங்களிப்பை வழங்கினார். கோவாவைச் சேர்ந்த சுகர் சாந்தி பானர்ஜியுடன் இணைந்து, ஐச்சி-நகோயா 2026-க்கான இந்தியாவின் முதல் ஆசிய விளையாட்டுப் போட்டி சர்ஃபிங் அணியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது குறித்து பேசிய கமலி, "இந்தப் பயணத்தை எண்ணி மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். முடிவில்லாத பயிற்சி, தியாகங்கள், சவால்கள் மற்றும் எண்ணற்ற உழைப்பு ஆகியவை தான் இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை சாத்தியப்படுத்தியுள்ளன. சிந்திய ஒவ்வொரு துளி வியர்வைக்கும், கடந்து வந்த ஒவ்வொரு கடினமான நாளுக்கும் இன்று பலன் கிடைத்துள்ளது. நாங்கள் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமையாகவும், நன்றியுடனும் இருக்கிறேன். இது வெறும் தொடக்கம் மட்டுமே, எங்களின் முழுத் திறனையும் வெளிப்படுத்துவோம்," என்று கூறினார்.

ஆசிய போட்டி 2026: இந்திய ஆடவர் ஹாக்கி அணி அபாரம்.. இந்தோனேஷியாவுக்கு எதிராக கோல் மழை

Also Read

ஆசிய போட்டி 2026: இந்திய ஆடவர் ஹாக்கி அணி அபாரம்.. இந்தோனேஷியாவுக்கு எதிராக கோல் மழை

சர்ஃபிங் விளையாட்டில் ஆசிய அளவில் இந்தியா இன்னும் ஒரு பலமிக்க நாடாகத் திகழாமல் இருக்கலாம். ஜப்பான், இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இந்த விளையாட்டில் முன்னணியில் இருந்தாலும், இந்திய வீரர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்பார்க்கலாம். ஏனெனில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச் சுற்றாகவும் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, September 20, 2026, 20:38 [IST]
Other articles published on Sep 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+