சிந்து அதிர்ச்சி தோல்வி.. பாட்மிண்டனில் கதை முடிந்தது.. துப்பாக்கி சுடுதலில் மகளிர் அணி ஆறுதல்!
நகோயா: ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய பாட்மிண்டன் அணிக்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர நாயகி பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
உலகின் 4-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யுபெய்யை எதிர்த்து களமிறங்கிய பி.வி.சிந்து, முதல் செட்டை 21-11 என மிக எளிதாகக் கைப்பற்றி மிரட்டினார். ஆனால் அடுத்த இரு செட்களிலும் சீன வீராங்கனை அபாரமாக மீண்டு வந்து பதிலடி கொடுத்தார். சுமார் 1 மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்த இந்த அனல் பறக்கும் போராட்டத்தின் முடிவில் 21-11, 18-21, 10-21 என்ற செட் கணக்கில் சிந்து வெற்றியை நழுவவிட்டார்.
சிந்து மட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை களமிறங்கிய 4 இந்திய காலிறுதி ஆட்டக்காரர்களும் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவி வெளியேறினர். இளம் வீராங்கனை உன்னதி ஹூடா, மகளிர் இரட்டையர் பிரிவில் திரிஷா ஜாலி - காயத்ரி கோபிசந்த் கூட்டணி மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் துருவ் கபிலா - தனிஷா கிராஸ்டோ ஜோடி என அனைவருமே காலிறுதியிலேயே வீழ்ந்தனர்.
இதனால் தனிநபர் பாட்மிண்டன் பிரிவுகளில் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்ல முடியாமல் ஏமாற்றமடைந்தது. ஆடவர் குழுப் பிரிவில் வென்ற ஒரே ஒரு வெண்கலப் பதக்கத்துடன் இந்தியாவின் பாட்மிண்டன் பயணம் சோகமாக முடிவுக்கு வந்துள்ளது.

அதேசமயம், துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிசிஷன் தகுதிச் சுற்றில் இந்திய அணி 3-வது இடத்தைப் பிடித்து அசத்தியது. இதில் இஷா சிங் 290 புள்ளிகளுடன் 6-வது இடத்தையும், ரஹி சர்னோபத் 15-வது இடத்தையும், மனு பாக்கர் 16-வது இடத்தையும் பிடித்தனர். இவர்கள் இருவரும் தலா 287 புள்ளிகள் எடுத்தனர். தனிநபர் இறுதிப்போட்டிக்கான அடுத்தகட்ட ரேபிட் சுற்று திங்கட்கிழமை நடைபெறுகிறது.


Click it and Unblock the Notifications

