காயம் அடைந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்ற முரளி ஸ்ரீசங்கர்.. ஆசிய விளையாட்டு நீளம் தாண்டுதலில் அபாரம்
நகோயா: 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய நட்சத்திர வீரர் முரளி ஸ்ரீசங்கர், கணுக்காலில் ஏற்பட்ட காயத்தையும் மீறி 8.07 மீட்டர் தூரம் தாண்டி அசத்தலாக வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். ஆடவர் நீளம் தாண்டுதல் இறுதிப்போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் தனது மிகச் சிறந்த முயற்சியாக முரளி ஸ்ரீசங்கர் 8.07 மீட்டர் தூரம் தாண்டி முன்னிலை பெற்றார்.
ஆனால் போட்டியின் 4வது முயற்சியின் போது ஸ்ரீசங்கருக்கு கணுக்காலில் பலத்த அடிபட்டது. வலியால் துடித்த அவருக்கு களத்திலேயே மருத்துவக் குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அந்த முயற்சியும் ஃபவுல் என அறிவிக்கப்பட்டது.

காயத்தின் தீவிரத்தால் அவர் தனது 5வது வாய்ப்பை தவிர்த்தார். அதேநேரத்தில், உஸ்பெகிஸ்தான் வீரர் அன்வர் அன்வரோவால் ஸ்ரீசங்கரின் 8.07 மீட்டர் தூரத்தை முறியடிக்க முடியவில்லை.
சீன வீரர் ஷி யுஹாவ் 8.17 மீட்டர் தூரம் தாண்டி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். காயத்தின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் மன உறுதியுடன் போராடிய முரளி ஸ்ரீசங்கர், 8.07 மீட்டர் தூரத்துடன் 2வது இடத்தை பிடித்து வெள்ளிப் பதக்கத்தை இந்தியாவுக்கு பெற்றுத் தந்துள்ளார். அவர் இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். முன்னதாக 2023 ஹாங்க்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் அவர் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார்.


Click it and Unblock the Notifications


