ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற கையோடு டீக்கடையில் வேலை.. வேறெங்க ..இந்தியாவில்தான்!
டெல்லி : ஆசிய விளையாட்டில் இந்தியா 69 பதக்கம் வென்று சாதித்துள்ளது. அதில் டெல்லியை சேர்ந்த ஹரிஷ் குமார் செபக்டக்ராவ் அணியில் வெண்கலம் வென்றார். எனினும், தன் குடும்ப சூழ்நிலை காரணமாக தற்போது தன் தந்தையின் டீக்கடையில் வேலை செய்து வருகிறார்.
அவரது குடும்பத்தில் அதிக உறுப்பினர்கள் இருப்பதால் இவர் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தான் எப்படி செபக்டக்ராவ் விளையாட்டில் சேர்ந்து பயிற்சி பெற்றேன் என்பது குறித்து கூறினார் ஹரிஷ்.

"நான் 2011இல் இருந்து இந்த விளையாட்டை ஆடி வருகிறேன். என் பயிற்சியாளர் ஹேமராஜ் தான் என்னை இந்த விளையாட்டுக்குள் அழைத்து வந்தார். அது வரை நான் டயர் வைத்துக் கொண்டு ஆடினேன். அவர் என்னை இந்திய விளையாட்டு ஆணையத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் பின், மாதாமாதம் பண உதவி மற்றும் விளையாட்டு உபகரணங்களை பெற்றேன். தினமும் பயிற்சி செய்து நாட்டுக்கு மேலும் பெருமை தேடி தருவேன்" என கூறியுள்ளார் ஹரிஷ்.
அவரது சகோதரர் கூறுகையில், "ஒரு சமயம் எங்களிடம் வாடகை கொடுக்க கூட பணம் இல்லை. அப்போது அவரது பயிற்சியாளர் ஹேமராஜ் அவரை விளையாட்டு மைதானத்தில் பயிற்சி அளிக்க கூட்டிச் சென்றார். அதன் பின், விளையாட்டு ஆணையம் எங்களுக்கு மாத உதவி வழங்கியது. நாங்கள் அவருக்கு ஒரு அரசு வேலை வழங்க வேண்டும் என அரசை கேட்டுக் கொள்கிறோம்" என முடித்தார்.


Click it and Unblock the Notifications