தங்கம் வென்ற ஸ்வப்னா பர்மனுக்கு ஷூ கிடைத்துவிடும்...நம்ம மெட்ராஸ் ICF உதவி செய்ய முன்வந்தது
சென்னை : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஹெப்டாத்லான் போட்டியில் முதன்முறையாக இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்தார் ஸ்வப்னா பர்மன். தங்கம் வென்ற பின் பேசும் போது தன் இரண்டு கால்களிலும் ஆறு விரல்கள் இருப்பதால் அதற்கேற்ற ஷூ கிடைக்காமல் பயிற்சி மற்றும் போட்டிகளில் பங்கேற்க சிரமமாக இருப்பதாக கூறினார் ஸ்வப்னா.
அவரது குடும்பப் பின்னணியும் மிகவும் ஏழ்மையானது. அவரது தந்தை ரிக்க்ஷா ஓட்டி வந்தார். தற்போது உடல் நலம் குன்றி படுக்கையில் இருக்கிறார். அவர் தாய் தேயிலை தோட்டத்தில் வேலை செய்தவர், தற்போது ஸ்வப்னாவின் தந்தையை கவனித்துக் கொள்ள வேலையே விட்டுவிட்டார். ஸ்வப்னாவின் சகோதரர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார்.

தங்கம் வென்ற ஸ்வப்னா தன் கால்களுக்கு ஏற்ற ஷூ கிடைக்குமா என பல பெரிய ஷூ உற்பத்தியாளர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை. ஸ்வப்னாவின் இந்த ஷூ பிரச்சினை இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் ஒரு விளையாட்டு வீரருக்கு ஏற்ற ஷூ கூட கிடைக்காதா? கிரிக்கெட் என்றால் கோடிகளில் பணம் கொட்டும் நிறுவனங்கள், தடகளம் போன்ற விளையாட்டுக்கு எதுவுமே செய்யமாட்டார்களா? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் கேட்கப்பட்டன.
இந்த விஷயம் இவ்வளவு பெரிதாக மாறியும், எந்த ஷூ நிறுவனமும் இவருக்கு தாமாக உதவ முன்வரவில்லை. இந்த நிலையில், சென்னையில் ரயில்வேக்கு கோச்களை தயாரித்து வரும் ICF எனப்படும் இன்டக்ரல் கோச் பாக்டரி நிறுவன மேலாளர், ஸ்வப்னாவுக்கு உதவ தங்கள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கு பல வகைகளில் உதவி வருகிறது. அந்த வகையில், ஸ்வப்னாவின் பிரத்யேக ஷூவுக்காக பிரபல ஷூ நிறுவனத்திடம் பேசியுள்ளதாகவும், ஸ்வப்னா இந்தியாவுக்கு வந்தவுடன் அளவுகள் எடுத்து வேலையை ஆரம்பித்துவிடலாம் எனவும் கூறியுள்ளார் ICF மேலாளர்.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஸ்வப்னாவுக்கு அந்த மாநில அரசு பத்து லட்ச ரூபாயும், அரசு வேலையும் வழங்க முன்வந்துள்ளது


Click it and Unblock the Notifications