வரலாற்று சாதனை.. ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 100 பதக்கம் வென்ற இந்தியா.. பிரதமர் மோடி வாழ்த்து
ஹாங்சோ : சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள வீரர் - வீராங்கனைகள் 100 பதக்கங்களுக்கும் மேல் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 27 தங்கம், 31 வெள்ளி, 49 வெண்கலம் வென்று மொத்தம் 107 பதக்கங்களை வென்று இருக்கிறது இந்தியா.
இதுவரை ஆசிய பாரா விளையாட்டில் இந்தியா இத்தனை பதக்கங்களை வென்றதே இல்லை. குறிப்பாக கடந்த முறை 15 தங்கப் பதக்கம் மட்டுமே வென்ற இந்தியா, தற்போது 27 தங்கம் வரை வென்று அசத்தி உள்ளது.
100 பதக்கம் என்ற மைல்கல் சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்த இந்திய பாரா விளையாட்டு வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து கூறி இருக்கிறார்.
பிரதமர் மோடி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், "ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் நமது வீரர்கள் 100 பதக்கங்கள் வென்றுள்ளனர். இது இணையற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த வெற்றிக்கு நமது விளையாட்டு வீரர்களின் அதீத திறமை, கடின உழைப்பு மற்றும் மன உறுதி ஆகியவையே காரணம். " எனக் கூறி இருக்கிறார்.

மேலும், "இந்த குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனை நம் இதயங்களை மகத்தான பெருமையால் நிரப்புகிறது. நமது விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் பணிபுரியும் அனைவருக்கும் எனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிகள் நம் அனைவரையும் ஊக்குவிக்கின்றன. நம் இளைஞர்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நினைவு படுத்துவதாக அவை அமைகின்றன" என இந்திய வீரர்களை பாராட்டி இருக்கிறார் பிரதமர் மோடி.


Click it and Unblock the Notifications