ஹாங்சோ : 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய பாரா விளையாட்டு போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது.
இந்தியா 16 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இது புதிய சாதனை ஆகும். இதற்கு முன் இந்தியா ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் 15 தங்கம் வென்றதே அதிக பட்சமாக இருந்தது.

இந்த நிலையில், 16 தங்கம் வென்று தந்து முந்தைய சாதனையை முறியடித்து இருக்கிறது இந்தியா. தற்போதைய நிலவரப்படி 16 தங்கம், 20 வெள்ளி, 32 வெண்கலம் வென்றுள்ளது இந்தியா. பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது மொத்தம் 68 பதக்கங்களுடன் ஆறாவது இடத்தில் உள்ளது.
இன்று ஆண்களுக்கான ஷாட் புட் எஃப் 46 விளையாட்டு போட்டியில் சச்சின் சர்ஜேராவ் கிலாரி இந்தியா சார்பில் கலந்துகொண்டு தங்கம் வென்றார். இதுவே 2023 ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 16 வது தங்கப் பதக்கம் ஆகும். மற்றொரு வீரர் ரோஹித் குமார் ஷாட் புட் விளையாட்டில் வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இது நான்காவது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டி ஆகும். இதில் இந்தியா சார்பில் பங்கேற்க 196 ஆண்கள், 113 பெண்கள் என மொத்தம் 309 வீரர்கள் பங்கேற்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு தொடருடன் ஒப்பிடும் போது இது அதிக எண்ணிக்கை ஆகும். அப்போது 188 விளையாட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்றனர்.