ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு கடல் நீச்சல்.. ஏப்ரல் 4ஆம் நாள் சென்னை மெரினாவில் புதிய முயற்சி!
சென்னை: உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, சென்னையில் ஒரு வித்தியாசமான சாதனை முயற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 4ஆம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் நீச்சல் சவாலை மேற்கொள்ள உள்ளனர்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான 'யாதவி ஸ்போர்ட்ஸ் அகாடமி' என்ற பயிற்சி மையத்தின் நிறுவனர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் சதீஷ் சிவகுமார் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். வழக்கமாக ஆட்டிசம் தினத்தில் நடத்தப்படும் விழிப்புணர்வு பேரணிகள் அல்லது சாலைக் காட்சிகளுக்குப் பதிலாக, இக்குழந்தைகள் தங்களின் திறமையை உலகிற்கு நிரூபிக்கும் வகையில் இந்த கடல் நீச்சல் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சவாலில் 8 முதல் 22 வயது வரையிலான சுமார் 38 குழந்தைகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுடன் பயிற்சியாளர்களும் பாதுகாப்புக்காக உடன் நீந்த உள்ளனர். இது குறித்துப் பேசிய சதீஷ் சிவகுமார், "முறையான ஆதரவு கிடைத்தால் இக்குழந்தைகளால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டவே இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்" எனத் தெரிவித்தார். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் பிரதிநிதிகளும் இந்த சாதனையை நேரில் ஆய்வு செய்ய உள்ளனர்.
இக்குழந்தைகளுக்குப் பயிற்சி அளிப்பது எளிதான காரியம் அல்ல. ஒவ்வொரு குழந்தையையும் முதலில் புரிந்து கொண்டு, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னரே பயிற்சியைத் தொடங்குவதாக சதீஷ் கூறுகிறார். தண்ணீரில் இருப்பது இக்குழந்தைகளுக்கு ஒருவித அமைதியைத் தருகிறது. நீச்சல் பயிற்சிக்குப் பிறகு குழந்தைகளின் கவனிக்கும் திறன், ஒருமித்த கவனம் மற்றும் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகப் பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வாரம் இரண்டு முறை இவர்கள் கடலில் நீச்சல் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஏற்கனவே இந்த அகாடமியைச் சேர்ந்த குழந்தைகள் கடலூரில் இருந்து சென்னை வரை 165 கிலோமீட்டர் தூரத்திற்குத் தொடர் கடல் நீச்சல் சாதனை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து 12 வயது ஹவிஷ் என்ற சிறுவனின் தந்தை சிவ ஷண்முகம் கூறுகையில், "கடந்த 2022ஆம் ஆண்டு முதல் எனது மகன் நீச்சல் பயிற்சி பெற்று வருகிறான். அவனுக்கு இது ஒரு சிறந்த மருத்துவ சிகிச்சை போலச் செயல்படுகிறது. ஆரம்பத்தில் தூக்கக் குறைபாடு இருந்த அவனுக்கு, இப்போது நீச்சல் மற்றும் உடற்பயிற்சி காரணமாக நல்ல தூக்கம் கிடைக்கிறது. தற்போது அவன் மிகவும் ஒழுக்கமானவனாகவும், சுறுசுறுப்பானவனாகவும் மாறியுள்ளான்" எனத் தெரிவித்தார்.
இக்குழந்தைகளிடம் இருக்கும் அபாரமான ஆற்றலைச் சரியான முறையில் பயன்படுத்தினால், அவர்களும் சமூகத்தில் சரிசமமாக மிளிர முடியும் என்பதற்கு இந்த கடல் நீச்சல் சாதனை ஒரு சிறந்த உதாரணமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications