லடாக்: சென்னையை சேர்ந்த ஸ்கேட்டரான அவிக்சித் விஜய் விஸ்வநாத், கேலோ இந்தியாவில் ஐஸ் ஸ்கேட்டிங் பிரிவில் தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே ஆசிய சாம்பியன்ஷிப்பில் ரோலர் வேக ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். குளிருக்கு சம்பந்தமே இல்லாத சென்னையில் பிறந்து வளர்ந்த அவிக்சித் விஜய், ஐஸ் ஸ்கேட்டிங்கில் பல்வேறு சாதனை படைத்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் ஆசிய அளவில் ஸ்கேட்டிங் பிரிவில் தங்கம், வெள்ளி மற்ம் வெண்கல பதக்கங்களை அவர் வென்றுள்ளார். தற்போது 2026 ஜனவரியில் லே (லடாக்) நகரில் நடந்த கேலோ இந்தியா குளிர்காலப் போட்டிகளில், தமிழ்நாட்டிற்காக ஆண்கள் 500 மீட்டர் ஸ்கேட்டிங்கில் அவிக்ஷித் தங்கம் வென்றார். இவர் தன் பிரிவில் உலகின் ஐந்தாவது அதிவேக இளையோர் வீரராகத் தரவரிசை பெற்றுள்ளார்.

இது குறித்து மைக்கேல் இணைய தளத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், குளிருக்கும், ஐஸ்க்கும் சம்பந்ததே இல்லாத தமக்கு, ரஜினி படம் மூலம் தான் ஸ்கேட்டிங் ஆசை வந்ததாக கூறினார். சிறு வயதில் டிவியில் தில்லு முல்லு திரைப்படத்தை பார்த்த போது, அதில் ரஜினியின் தங்கை ஸ்கேட்டிங் செய்வதை பார்த்து, வீட்டில் அடம் பிடித்து வாங்கி தாமும் ஸ்கேட்டிங் கற்று கொண்டதாக கூறினார்.
4 வயதில் ஸ்கேட்டிங் அபாரமாக செயவதை பார்த்து, எனது பெற்றோர்கள் ஒரு பயிற்சியாளரிடம் சேர்த்து விட்டார்கள். அங்கிருந்து ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்து கொண்டு உலக அளவிலான போட்டியில் பங்கேற்றேன். இன்லைன் ஸ்கேட்டிங் பிரிவில் ஆசிய அளவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் நான் தான்.
இந்த சூழலில், சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இன்லைன் ஸ்கேட்டிங் பிரிவிலிருந்து ஐஸ் ஸ்கேட்டிங்கிற்கு மாறினேன். இந்தியாவில் ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி செய்ய எங்கும் மைதானம், உட்கட்டமைப்பு வசதி இல்லை. இதனால் நெதர்லாந்துக்கு சென்று அங்கு பயிற்சி செய்து வருகிறேன். அங்கு தான், ஐஸ் ஸ்கேட்டிங் பயிற்சி எடுத்து, பல உலககோப்பை போட்டியில் பங்கேற்றேன். அடுத்த மாதம் கூட ஜெர்மனியில் ஐஸ் ஸ்கேட்டிங் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கிறேன். அதற்கு மக்கள் எனக்கு பிரார்த்திக்க வேண்டும்.
குளிர்கால ஒலிம்பிக்கில் எக்னனால் தகுதி பெற முடியலில்லை. எனினும், 2030 ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக்கில் தகுதி பெற்று பதக்கம் வெல்வதே என் கனவு. அதற்காக நான் உழைத்து வருகிறேன். சென்னையில் பிறந்ததால், குளிர் எனக்கு புதியது தான். மீண்டும் சென்னைக்கு சென்று என்னுடைய இந்த குளிர் ஜாக்கெட்டை கழற்றிவிட்டு வெயிலில் பைக்கில் சுற்ற ஆர்வமாக உள்ளேன் என்று கூறினார்.
2024 பிற்பகுதியிலும் 2025 முழுவதும், அவிக்ஷித் ISU ஜூனியர் உலகக் கோப்பை பனி ஸ்கேட்டிங் தொடர்களில் (மிலன், கொலால்போ) போட்டியிட்டார். 500 மீட்டர் நியோ-சீனியர் பிரிவில் பலமுறை முதல் 10 இடங்களையும், தனிப்பட்ட புதிய சாதனைகளையும் படைத்தார். SDAT ஆதரவுடன், இன்லைன் ஸ்கேட்டிங்கில் இருந்து ஐஸ் ஸ்கேட்டிங்கிற்கு அவர் வெற்றிகரமாக மாறினார்.
விளையாட்டுக்கு அப்பால், அவிக்ஷித் நிதி மேலாண்மை துறையிலும் கவனம் செலுத்துகிறார். அவர் CFA லெவல் 1 தேர்வுக்குத் தயாராவதுடன், பங்கு ஆராய்ச்சி மற்றும் போர்ட்ஃபோலியோ மேலாண்மைத் துறையில் பணியாற்ற விரும்புகிறார். யூனிஃபை கேபிட்டல் உள்ளிட்ட நிதி நிறுவனங்களில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.