"கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே" - மல்யுத்த உலக சாம்பியன்ஷிப்.. பஜ்ரங் புனியா விலகல்
மும்பை: காயம் காரணமாக மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா விலகியுள்ளார்.
பஜ்ரங் புனியா.. இந்த பெயரை இந்திய ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். ஏனெனில், டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக போராடி வெண்கலப்பதக்கம் வாங்கிக் கொடுத்த மல்யுத்த வீரர் இவர்.
32ஆவது ஒலிம்பிக் தொடரில் வெண்கல பதக்கத்திற்கான 65 கிலோ எடை பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, கஜகஸ்தான் நாட்டின் டேவ்லெட் நியாஸ்போகோ ஆகியோர் மோதினர். இப்போட்டியில் 8-0 என்ற கணக்கில் வென்று பஜ்ரங் வெண்கல பதக்கத்தைத் தட்டிச் சென்றார்.

பஜ்ரங் புனியா காயம்
இந்த நிலையில், எதிர்வரும் மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து பஜ்ரங் புனியா காயம் காரணமாக விலகியுள்ளார். டோக்கியோ விளையாட்டுப் போட்டிகளில் அவருக்கு வலது முழங்காலில் தசைநார் கிழிவு ஏற்பட்டது. அதனைக் குணப்படுத்த ஆறு வார காலம் ஆகும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மல்யுத்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை அவர் எடுக்க நேரிட்டது. அக்டோபர் 2-10 தேதிகளில் நார்வேயின் ஒஸ்லோவில் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும். இதற்கான பயிற்சியில் பஜ்ரங் இதுவரை தொடங்கவில்லை. இந்த நிலையில் தனது விலகல் முடிவை அறிவித்துள்ளார்.

டாக்டர் டின்ஷா
ஒலிம்பிக் தொடருக்கு முன்பே அவருக்கு ரஷ்யாவில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், பஜ்ரங் சமீபத்தில் ஒரு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து, காயத்தின் அளவை அறிந்து, மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவ மையத்தின் தலைவர் டாக்டர் டின்ஷா பர்திவாலாவை அணுகி ஆலோசனை நடத்தினார். அதன் பிறகே அவர் தொடரில் இருந்து விலகும் முடிவு எடுக்கப்பட்டது.

சீசன் முடிந்தது
இதுகுறித்து பஜ்ரங் புனியா, "இது ஒரு தசைநார் பாதிப்பாகும். இதனை குணப்படுத்த டாக்டர் டின்ஷாவால் தலைமையில் ஆறு வாரங்களுக்கு சிகிச்சையை பின்பற்றும்படி என்னிடம் கேட்கப்பட்டது. இதனால், உலக சாம்பியன்ஷிப்பில் என்னால் போட்டியிட முடியாது" என்று பிடிஐயிடம் கூறினார். இந்த ஆண்டின் இறுதியில் எந்த போட்டிகளும் இல்லை. இதனால், இந்தாண்டுக்கான தனது சீசன் முடிந்துவிட்டதாக பஜ்ரங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "உலக சாம்பியன்ஷிப் மட்டுமே இந்த ஆண்டில் மீதமுள்ள ஒரே பெரிய சாம்பியன்ஷிப் தொடராகும். இந்த சீசனில் வேறு எந்த போட்டியிலும் நான் இனி போட்டியிட முடியும் என்று நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.

காலில் காயம்
ஜூன் மாதம் அலி அலியேவ் - ரஷ்ய போட்டியில் பங்கேற்ற போது பஜ்ரங் காயமடைந்தார். பஜ்ரங் தனது அரையிறுதி ஆட்டத்தில் அபுல்மாஜித் குடீவுக்கு எதிராக இழந்தார். போட்டியின் போது அவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. அபுல்மாஜித் போட்ட கிடுக்குப்பிடியில் தான் இந்த காயம் ஏற்பட்டது. இதன் தாக்கம் பஜ்ரங்கின் வலது முழங்காலில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர் போட்டியில் இருந்து வெளியேறும் சூழல் ஏற்பட்டது. இருந்தாலும் புனியா ஒலிம்பிக்கில் போட்டியிட்டு 65 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார்.

வலியுடன் போட்டியிட்டேன்
இதுகுறித்து அவர் கூறுகையில், "இது எனது முதல் ஒலிம்பிக் தொடராகும். ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது என கனவு. இதனால், நான் வலி இருந்தாலும் டோக்கியோவில் போட்டியிட்டேன். நான் அதை செய்ய வேண்டியிருந்தது. டாக்டர் டின்ஷா சில உடற்பயிற்சிகளை அறிவுறுத்தினார், நான் இப்போது தினமும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறேன். பயிற்சி நேரத்தை அதிகப்படுத்தியுள்ளேன்" என்று அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications