
டாஸ் வென்ற சென்னை
டாஸ் வென்ற சென்னை ரைனோஸ் அணி முதலில் பேட் செய்வதாக அறிவித்தது. அதன்படி, சாந்தனுவும், அதிரடி வீரரான விக்ராந்தும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

அதிரடி விக்ராந்த்... சாந்தமான சாந்தனு
விக்ராந்த் ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும், மறுமுனையில் பேட் செய்த சாந்தனு பொறுமையுடன் விளையாடினார். அணியின் ஸ்கோர் 65 ரன்களாக இருந்தபோது, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த விக்ராந்த், விவேக் கோபன் பந்தில் விக்கெட் கீப்பர் அருணால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். விக்ராந்த் 23 பந்துகள் மட்டுமே சந்தித்து 35 ரன்கள் எடுத்திருந்தார். இதில் 5 பவுண்டரிகளும் அடங்கும்.

சாந்தனு அரை சதம்
இவரைத் தொடர்ந்து சாந்தனுவுடன், மற்றொரு அதிரடி வீரரான விஷ்ணு ஜோடி சேர்ந்தார். இருவரும் கேரளா அணியின் பந்துவீச்சை பொறுமையாக கையாண்டு அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். தனது விளையாட்டில் பொறுமையை கையாண்ட சாந்தனு, இந்த போட்டியில் அரை சதத்தை கடந்தார். 19.1 ஓவரில் சாந்தனு 52 ரன்கள் எடுத்து, அருண் பந்தில் ஸ்டம்புகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார். அவர் இந்த ரன்களை எடுக்க 60 பந்துகளை சந்தித்தார்.

இணைந்த பிருத்வி
5 பந்துகள் மீதமிருந்த நிலையில், விஷ்ணுவுடன், பிரித்வி இணைந்தார். பிரித்வி தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 148 ரன்கள் எடுத்தனர்.

விஷ்ணு 41
விஷ்ணு 41 ரன்களுடனும், பிரித்வி 6 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இதைத் தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கேரளா அணியின் தொடக்க வீரர்களாக கோடியெரியும், ராஜீவ் பிள்ளையும் களமிறங்கினர்.

மிரட்டிய சென்னை பந்து வீச்சு
ஆரம்பம் முதலே சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் கேரள அணியினர் திணறினர். அணியின் ஸ்கோர் 28-ஆக இருந்தபோது கோடியெரியை அசோக் செல்வன் ரன் அவுட் செய்து பெவிலியன் அனுப்பினார். அவரைத் தொடர்ந்து ராஜீவ் பிள்ளை 16 ரன்களுடனும், நந்தகுமார் 8 ரன்களுடனும் வெளியேற 12.5 ஓவர்களில் கேரளா அணி வெறும் 55 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பொறுமையான அருண்
இதைத் தொடர்ந்து களமிறங்கிய அருண் சற்று பொறுமையுடன் சென்னை அணி வீரர்களின் பந்துகளை கையாண்டார். இருந்தாலும், உன்னிமுகுந்தன் 2 ரன்களுடனும், அவரைத் தொடர்ந்து, அருண் 20 ரன்னுடனும் வெளியேறி கேரளா அணிக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

70 ரன்களில் பரிதவிப்பு
இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய பிரஷோத் கலாபவன் 1 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேற, 15.4 ஓவரில் கேரளா அணி 70 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்து பறிதவித்தது. இறுதியில் ஆசிப் அலியும் 4 ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கேரளா அணி 89 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

சென்னைக்கு முதல் வெற்றி
கேரளா அணியில் விவேக் கோபன் 11 ரன்களுடனும், ரியாஸ் கான் 1 ரன்னுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். சென்னை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் கேரளா அணியை வெற்றி கொண்டு, 2015-நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

வீர் மராத்தியுடன் அடுத்து மோதல்
சென்னை அணி வருகிற 18-ந் தேதி மகாராஷ்டிர நடிகர்கள் பாலிவுட் நடிகர்கள் அடங்கிய வீர் மராத்தி அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டி பெங்களூரில் நடக்கவிருக்கிறது.

குவிந்த நட்சத்திரங்கள்
இந்தப் போட்டியைக் காண தமிழக, கேரள நடிகர்கள் பட்டாளம் மைதானத்தில் குவிந்திருந்தது. ஸ்ரீிபிரியா, சோனியா அகர்வால், மோகன்லால், லிஸ்ஸி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

விஷால் - வரலட்சுமி வரலை!
கடந்த போட்டிகளில் சென்னை அணியின் கேப்டனாக இருந்த நடிகர் விஷால் இந்த முறை வரவில்லை. அதேபோல வீரர்கை உற்சாகப்படுத்த வரும் நடிகை வரலட்சுமியும் வரவில்லை.


Click it and Unblock the Notifications