சென்னை: சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 செஸ் தொடரின் நான்காம் நாள் ஆட்டம் (ஞாயிற்றுக்கிழமை) பெரும் திருப்பங்களுடன் முடிவடைந்துள்ளது. இந்திய நட்சத்திர வீரர் அர்ஜுன் எரிகைசி, சக வீரரான நிஹால் சரின் இடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். அதே சமயம், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.
இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காமல் வலம் வந்த இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியின் வெற்றிப் பயணத்திற்கு, சக இந்திய வீரர் நிஹால் சரின் முற்றுப்புள்ளி வைத்தார். நேற்றைய நான்காம் சுற்று ஆட்டத்தில் இருவரும் மோதினர்.
ரெட்டி ஓப்பனிங்குடன் தொடங்கிய இந்த ஆட்டம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் வர்ணனை செய்ய, ஆட்டம் மெதுவாக ஆனால் விறுவிறுப்பாக நகர்ந்தது. ஆரம்பத்தில் அர்ஜுன் ஒரு காயை வெட்டி முன்னிலை பெற்றாலும், நிஹால் சரின் பொறுமையாக விளையாடி ஆட்டத்தைத் தன் பக்கம் திருப்பினார்.
சுமார் 70 நகர்வுகள் வரை நீடித்த இந்த நெடிய போரில், நிஹால் சரின் அபாரமாக வெற்றி பெற்று, இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். இந்தத் தோல்வி அர்ஜுனுக்கு இந்தத் தொடரின் முதல் தோல்வியாகும்.
மற்றொரு முக்கிய ஆட்டத்தில், ஜெர்மனியின் இளம் புயல் வின்சென்ட் கீமர், நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியுடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இதன் மூலம், தோல்வியே சந்திக்காத வீரர் என்ற பெருமையுடன், வின்சென்ட் கீமர் 3.5 புள்ளிகளுடன் மாஸ்டர்ஸ் பிரிவில் தனித்து முதலிடத்தில் நீடிக்கிறார். அர்ஜுன் எரிகைசி 2.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
மற்றொரு இந்திய வீரரான முரளி கார்த்திகேயன், ஜோர்டன் வான் ஃபாரஸ்ட்டை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறினார். விதித் குஜராத்தி மற்றும் பிரணவ் மோதிய ஆட்டமும், அமெரிக்க வீரர்களான அவோண்டர் லியாங் மற்றும் ரே ராப்சன் மோதிய ஆட்டமும் டிராவில் முடிந்தன.
சாலஞ்சர்ஸ் பிரிவில், அபிமன்யு புராணிக், வைஷாலி ரமேஷ்பாபுவை வீழ்த்தி 3.5 புள்ளிகளுடன் தனித்து முதலிடம் பிடித்துள்ளார். மற்றொரு தமிழக வீரர் பிரனேஷ், அதிபன் பாஸ்கரனுடன் டிரா செய்ததால், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
முன்னதாக, திங்கட்கிழமை ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், போட்டி தொடங்குவதற்கு முன் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொடர் ஒருநாள் தாமதமாகத் தொடங்கியது. இதனால், திங்கட்கிழமை ஓய்வு நாள் ரத்து செய்யப்பட்டு, இன்று ஐந்தாம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்றைய ஆட்டங்கள், தொடரின் வெற்றியாளரை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.