சென்னை : இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னை மெல்ல மெல்ல மாறி வருகிறது. கிரிக்கெட், கால்பந்து என சென்னை மக்கள் உயிரை விடும் நிலையில் தற்போது பல சர்வதேச போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் விளையாட்டு உலகில் சென்னை முக்கிய நகரமாக விளங்கி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி கடந்த ஆண்டு மிக கோலாகலமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு போட்டிகள் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்மையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது தெற்காசியாவில் முதல் முறையாக இரவு நேரத்தில் பார்முலா ஃபார் பந்தயம் நடைபெற உள்ளது.
இதற்காக தமிழக அரசு 42 கோடி ரூபாய் செலவு செய்ய உள்ளது. இதில் தீவுத்திடலை சுற்றி சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இந்தப் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தீவுத்திடலை சுற்றியுள்ள சாலைகளை பார்முலா போர் கார்ப்பந்தயம் நடத்தும் வகையில் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட இருக்கிறது. இந்தப் பந்தயம் டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிக ரசிகர்களால் பார்முலா கார்பந்தயங்கள் பார்க்கப்படுகிறது. இதில் ஃபார்முலா 1 என்பது இந்த விளையாட்டிலே முதன்மையானதாகும். இதில் நான்காவது அளவுதான் ஃபார்முலா போர் என்பதாகும். இந்த விளையாட்டுப் போட்டி பெரும்பாலும் பகல் நேரத்தில் நடத்தப்படுவது உண்டு.
ஆனால் தெற்காசியாவில் முதல் முறையாக இந்த போட்டியை இரவில் சென்னையில் நடத்த தமிழக விளையாட்டு துறை நடவடிக்கை எடுத்து உள்ளது. இது வெற்றிகரமாக நடத்தப்பட்டால் சென்னை மீது விளையாட்டு உலகின் கவனம் முற்றிலும் திரும்பும். சென்னையிலிருந்து நிறுத்தப்பட்ட சென்னை ஓபன் டென்னிஸ் தொடரும் மீண்டும் நடத்தப்பட்டால் கால்பந்து, கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, செஸ், பேட்மிண்டன், கபடி, வாலிபால் என அனைத்திற்கும் சென்னை தலைநகரமாக மாறிவிடும்.