பதுமி, ஜார்ஜியா: இந்திய செஸ் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தமாக ஃபிடே மகளிர் உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில், 19 வயது இளம் புயல் திவ்யா தேஷ்முக், அனுபவ வீராங்கனை கோனேரு ஹம்பியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார். ஜார்ஜியாவின் பதுமி நகரில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டி, கடைசி நொடி வரை ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிறச் செய்தது.
இந்தியாவின் இரு பெரும் வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் மோதியதால், கோப்பை இந்தியாவிற்குத்தான் என்பது முன்பே உறுதியாகிவிட்டது. கிளாசிக்கல் சுற்றின் இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிந்ததால், வெற்றியாளரைத் தீர்மானிக்க போட்டி டைபிரேக்கர் சுற்றுக்கு இந்த இறுதிப் போட்டி சென்றது. முதல் ரேபிட் ஆட்டமும் டிராவில் முடிய, இரண்டாவது ரேபிட் ஆட்டம் தான் சாம்பியனைத் தீர்மானிக்கும் போட்டியாக அமைந்தது.

வெள்ளைக் காய்களுடன் களமிறங்கிய கோனேரு ஹம்பிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால், ஆட்டத்தின் இறுதி நொடியில் எல்லாம் தலைகீழாக மாறியது.
ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நிலையில், கோனேரு ஹம்பி செய்த ஒரு சிறிய தவறான நகர்வு, போட்டியின் ஒட்டுமொத்த போக்கையும் திவ்யாவிற்குச் சாதகமாக மாற்றியது. ஹம்பியின் இந்த ஒரு நிமிடத் தவறை கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்ட திவ்யா, ஆட்டத்தின் கட்டுப்பாட்டைத் தன்வசப்படுத்தினார்.
இந்த எதிர்பாராத திருப்பத்தால் அதிர்ச்சியடைந்த ஹம்பியால், அதிலிருந்து மீள முடியவில்லை. திவ்யாவின் அபாரமான ஆட்டத்திற்கு முன் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. நிலைமை கைமீறிப் போனதை உணர்ந்த கோனேரு ஹம்பி, தனது தோல்வியை ஒப்புக்கொண்டு ஆட்டத்தில் இருந்து விலகினார். இதன்மூலம், இளம் வீராங்கனை திவ்யா தேஷ்முக், ஃபிடே மகளிர் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திரச் சாதனையைப் படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம், திவ்யா உலகக் கோப்பையை வென்றது மட்டுமல்லாமல், 'கிராண்ட்மாஸ்டர்' பட்டத்தையும் பெற்றுள்ளார். வெறும் 19 வயதில் உலக ஜூனியர் சாம்பியன் மற்றும் தற்போது உலகக் கோப்பை சாம்பியன் என இரட்டை மகுடம் சூடி, இந்திய செஸ்ஸின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதை திவ்யா நிரூபித்துள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி இந்திய விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.