விஸ்வநாதன் ஆனந்த் எனக்கு கடவுள் மாதிரி.. தமிழக அரசு அந்த நேரத்தில் நடத்திய போட்டி.. குகேஷ் பேச்சு!
சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி தமிழக வீரர் குகேஷ் புதிய வரலாறு படைத்தார். 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றார். இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருந்து குகேஷ்-க்கு வாழ்த்துகள் குவிந்தது.
அதேபோல் தமிழக அரசு சார்பாக குகேஷ்-க்கு ரூ.5 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு திரும்பிய குகேஷ்-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக குகேஷ்-க்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். இந்த விழாவில் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. இதன்பின் குகேஷ் பேசுகையில், இங்கு உலக செஸ் சாம்பியனாக நிற்பதற்கு என்னை சுற்றியுள்ளவர்களும், எனது எதிர்காலத்தை வடிவமைத்தவர்களும் தான்.
முதலில் பெற்றோருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதேபோல் விஸ்வநாதன் ஆனந்த சார் பற்றி நாள் முழுவதும் பேசலாம். அவ்வளவு உதவிகளை செய்திருக்கிறார். விஸ்வநாதன் ஆனந்த் சாரை பார்த்து தான் செஸ் விளையாட தொடங்கினேன். 2013ஆம் ஆண்டு உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் விளையாடியதை பார்த்து ஊக்கமடைந்தேன்.
ஒரு ரோல்-மாடலாக எனக்கு இருக்கிறார். சென்னை, தமிழ்நாடு, இந்தியா என்று இன்னும் ஏராளமான இளைஞர்களுக்கும் ஊக்க்கமாக இருந்து வருகிறார். அதேபோல் 2020ஆம் ஆண்டு என் வாழ்க்கையின் முக்கிய பகுதியாக இருந்தது. WACA அகாடமியில் இணைந்தேன். அதற்கு விஸ்வநாதன் ஆனந்த் சாரின் அழைப்பு முக்கிய காரணம். அதன்பின் WACAவின் பங்களிப்பு அபரிவிதமாக இருந்தது. அங்கு செஸ் குறித்து ஆலோசிக்க விஸ்வநாதன் ஆனந்த் இருப்பார்.
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், விஸ்வநாதன் ஆனந்த் எனக்கு கடவுளை போன்றவர். தமிழ்நாட்டில் உள்ள செஸ் வீரர்கள், வீராங்கனைகளுக்கு விஸ்வநாதன் ஆனந்த் ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். 18 வயதிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது மகிழ்ச்சியாக உள்ளது. எனது வாழ்க்கையின் நீண்ட நாள் கனவு இதுதான். செஸ் விளையாட்டிற்கு சிறந்த நகரமாக சென்னை மாறியுள்ளது. அதன் பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட செஸ் ஒலிம்பியாட் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். ஏனென்றால் குறுகிய காலத்திலேயே செஸ் விளையாட்டுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்துள்ளது. சென்னையில் கிராண்ட் மாஸ்டர் போட்டி நடக்கவில்லை என்றால், என்னால் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தேர்வாகி இருக்க முடியாது. செஸ் போட்டிகளில் வென்று சொந்த மண் வரும் போதெல்லாம் என்னை பாராட்டவும், உதவி செய்து ஊக்குவிக்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தயக்கம் காட்டியதில்லை என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications