சென்னை: 2022 ஆம் ஆண்டு செஸ் ஒலிம்பியாட் தொடர் தற்போது கடினமான சுற்றுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.
ஓபன் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும், 100 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில், 4வது சுற்றில் முதல் தோல்வியை சந்தித்தது.

இதில் இந்திய பி அணியில் விளையாடும் பிரக்ஞானந்தா நடப்பு தொடரில் முதல் முறையாக டிராவை சந்தித்துள்ளார்.
இந்திய ஏ அணியில் விளையாடிய 4 போட்டியாளர்களும் டிராவை சந்தித்தனர். பிரான்ஸ் வீரர்களை எதிர்கொண்ட இந்திய ஏ அணியின் ஹரிகிருஷ்ணா, குஜராத்தி, அர்ஜூன், நாராயணன் ஆகிய 4 பேரும் டிராவை சந்தித்துள்ளனர். இதே போன்று இந்திய சி அணியில் ஸ்பெயின் அணியை இந்தியா எதிர்கொண்டது.
இதில் தமிழக வீரர் சேதுராமன் டிராவை கண்டார். இந்த அணியில் விளையாடிய குப்தா ஸ்பெயின் வீரர் ஆண்டன் டேவிட்டிடம் தோல்வியை தழுவினார். மற்ற 2 பேரும் போட்டியை சமன் செய்தனர். இந்திய பி அணி இத்தாலியை எதிர்கொண்டது. இதில் குகேஷ், சரின் ஆகியோர் வெற்றி பெற, பிரக்ஞானந்தா மற்றும் சத்வாணி ஆகியோர் டிராவை கண்டனர்.
4 சுற்று முடிவில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி 15 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.அர்மேனியா 2வது இடத்தில் 12.5 புள்ளிகளுடன் உள்ளது. இந்திய ஏ அணி 7வது இடத்திலும், அமெரிக்கா 11வது இடத்திலும் உள்ளது. மகளிர் பிரிவில் இந்திய ஏ அணி 4வது இடத்தில் உள்ளது.