செஸ் ஒலிம்பியாட்: ரஜினி முதல் ரஹ்மான் வரை.. தொடக்க விழா விருந்தினர்கள் யார்? வெளியான புது தகவல்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவுள்ள விருந்தினர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டிக்காக தமிழக அரசு சார்பில் மிகவும் பிரமாண்டமான தொடக்க விழா ஒன்றை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடக்க விழா
சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று இரவு 7 மணிக்கு தொடக்க விழா நடைபெறவிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கவைக்கவுள்ளார். இதுமட்டுமல்லாமல் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவிருக்கிறது.

யார்? யார்? பங்கேற்கிறார்கள்?
இந்நிலையில் இந்த போட்டியில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் தவிர்த்து மற்ற எந்தெந்த விருந்தினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் ரீதியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்த்ரராஜனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் வருகை?
அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். செஸ் ஒலிம்பியாட்டிற்காக விளம்பர பாடல் இசைத்த ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிகிறது. செஸ் ஒலிம்பியாட் டீசரை வெளியிட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற நடிகர்கள் யார் யார்?
இவர்கள் மட்டுமின்றி நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோரும், நடிகை நயன்தாரா, திரிஷா உள்ளிட்டோருக்கும் தொடக்க விழாவில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பு மத்தியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியால் இன்று இரவு சென்னை நகரமே ஜொலிக்கும் என மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications