செஸ் ஒலிம்பியாட் 2022: பதக்கம் வென்றவர்கள் யார் யார்? இந்தியாவின் நிலை என்ன? - முழு பதக்கப்பட்டியல்!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஓபன் மற்றும் மகளிர் அணிகள் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்றுடன் முடிவுக்கு வந்தது.
கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் மொத்தம் 189 நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டனர்.

புள்ளிப்பட்டியல்
இந்த போட்டியின் முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளது. மொத்தமுள்ள 11 ரவுண்ட் போட்டிகளில் அந்த அணி 19 புள்ளிகளை பெற்றுள்ளது. இதே போல 2வது இடத்தை அர்மேனியா நாட்டின் அணி பிடித்துள்ளது. அந்த அணியும் 11 போட்டிகளில் 19 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால் டை பிரேக்கர் புள்ளிகளில் உஸ்பெகிஸ்தானை விட குறைவாக இருந்ததால் வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

இந்திய அணி நிலை
பிரக்ஞானந்தா, யூகேஷ் உள்ளிட்ட வீரர்கள் விளையாடிய இந்தியாவின் பி அணி 3வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்திய பி அணி 11 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்தியாவின் ஏ அணி 17 புள்ளிகளை மட்டுமே பெற்றதால் 4வது இடத்தை பிடித்தது. எனினும் பதக்கம் எதுவும் இல்லை.

மகளிர் பிரிவு நிலவரம்
மகளிர் பிரிவை பொறுத்தவரையில் 11 சுற்றுகளின் முடிவில் உக்ரைன் அணி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றுள்ளது. அந்த அணி 11 போட்டிகளில் 18 புள்ளிகளை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஜார்ஜியா அணி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்த அணியுன் 18 புள்ளிகள் பெற்ற போதும் டை பிரேக்கர் அடிப்படையில் வெள்ளிப்பதக்கத்தை வென்றது.

இந்திய அணிக்கு வெண்கலம்
இந்தியாவின் மகளிர் ஏ அணி வெண்கலப்பதக்கத்தையே கைப்பற்றியது. இந்திய அணி 11 போட்டிகளில் 17 புள்ளிகளை பெற்றது. மற்றொரு இந்திய மகளிர் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணி 16 புள்ளிகளை பெற்ற போதும் டை பிரேக்கர் அடிப்படையில் பின் தங்கியது.

தனிநபர் தங்கப்பதக்கம்
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனி வீரர், வீராங்கனைகளுக்கான பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஓபன் பிரிவில் இந்திய வீரர்கள் கூகேஷ் மற்றும் நிகல் சரின் ஆகியோர் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளனர். மகளிர் பிரிவில் இருந்து இந்தியாவின் சார்பில் ஒரு வீராங்கனை கூட தங்கப்பதக்கத்தை வெல்லவில்லை.


Click it and Unblock the Notifications