EXCLUSIVE- சந்திரயான் வெற்றியும்,மகன் சாதனையும் ஒன்றாக நடந்தது மகிழ்ச்சி..பிரக்ஞானந்தா தந்தை கருத்து
சந்திரயான் திட்டத்தின் மூலம் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் படைத்த சாதனையும் தனது மகன் செஸ் உலகில் படைத்த சாதனையும் ஒரே சமயத்தில் நடந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். இந்த நிலையில் தனது மகன் வெற்றி குறித்து அவருடைய தந்தை ரமேஷ் பாபு Mykhel தமிழ் இணையதளத்திற்கு அளித்த பேட்டியை தற்போது பார்க்கலாம்.

என்னுடைய மகன் உலகின் முன்னணி வீரர்களை வீழ்த்தி இறுதிப் போட்டி வரை வென்று கார்ல்சன் போன்ற வீரரிடம் பலப்பரீட்சை நடத்தி இருக்கிறார். தற்போது அவருக்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருக்கிறது. இதை நினைக்கும் போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றிக்கு பிரக்ஞானந்தாவின் கடின உழைப்பும் சிறுவயதில் இருந்தே செஸ் போட்டிக்கு அவர் எடுத்துக் கொண்ட பயிற்சியும் தான் காரணம்.
பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றிக்கு அவருடைய முதல் பயிற்சியாளரான சேதுராமனும் தற்போதைய பயிற்சியாளருமான ஆர் பி ரமேஷும் தான் இதற்குக் காரணம். பிரக்ஞானந்தாவின் பள்ளி நிர்வாகமும் அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறது. அவர் முக்கிய வகுப்புகளை விட்டாலும் அவருக்கென தனி கவனம் செலுத்தி பாடத்தையும் நடத்துவார்கள். அதே சமயம் செஸ் பயிற்சியையும் வழங்குவார்கள்.
அரசிடமிருந்து எங்களுக்கு போதிய உதவி நீண்ட நாட்களாகவே கிடைத்து வருகிறது. இந்த தருணத்தில் பிரக்ஞானந்தாவுக்கு உதவிய பல ஸ்பான்ஸர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நான் சென்னையில் இருக்கிறேன். பிரக்ஞானந்தாவின் தாய் மட்டும் தான் அவருடன் அசர்பைஜானில் இருக்கிறார். பிரக்ஞானந்தா அசர் பைஜானில் இருந்து நாளைய ஜெர்மனியில் ஒரு செஸ் போட்டியில் பங்கேற்க செல்கிறார்.
கார்ல்சன் போன்ற வீரரை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. ஆனால் பிரக்ஞானந்தா வெள்ளி பதக்கம் வாங்கியது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. நிலவில் சந்திராயன் திட்டம் நமது விஞ்ஞானிகளால் வென்று நமது நாடு சாதனை படைத்திருக்கிறது. அதன் ரோவருக்கு பிரக்யான் என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
இதே சமயத்தில் என்னுடைய மகனும் உலகக்கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்று இருப்பது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ரமேஷ் பாபு கூறியுள்ளார்.மேலும் செஸ் பயிற்சி முகாம் நடத்துவது தொடர்பாக ஏதேனும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு தற்போது போட்டி தொடர்களில் பிரக்ஞானந்தா பங்கேற்று வருகிறார். அதன் பிறகு தான் இதைப் பற்றி எல்லாம் யோசிக்க வேண்டும் என்று ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications