சென்னை : உலக கோப்பை செஸ் தொடரில் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் பிரக்ஞானந்தா சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் வரவேற்பையே மிஞ்சும் அளவிற்கு தமிழக அரசால் இந்த ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளது. திறந்த வெளி காரில் மேலே நின்று பிரக்ஞானந்தா அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா தமக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கூறினார். இதைத் தொடர்ந்து பேசிய பிரக்ஞானந்தா உலககோப்பை என்பது மிகவும் முக்கியமான தொடர் அதிலும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முதலில் கான்டிடேட் தொடரில் விளையாட வேண்டும். அதில் தேர்வானதே தமக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
முதல் சுற்றிலே தலைசிறந்த வீரர்களை தாம் எதிர்கொள்ள இருந்ததால் எனக்கு எவ்வித எதிர்பார்ப்பும் இந்த தொடரில் இல்லை. சவால்களை சந்திக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதுணையோடு இருந்தேன். அதற்கு ஏற்றார் போல் பயிற்சி மேற்கொண்டு இருந்தேன். தங்கம் கிடைக்காமல் போனது சிறிது வருத்தமாக இருந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்றதும் மகிழ்ச்சி தான் என பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் அடுத்தடுத்து நிறைய செஸ் போட்டிகள் வர இருப்பதால் அதற்கான பயிற்சிகளை தொடங்க வேண்டும் என்று கூறினார். மேலும் தமது வெற்றியின் ரகசியம் குறித்து பேசிய பிரக்ஞானந்தா எந்தப் போட்டியில் விளையாடுவதாக இருந்தாலும் நமது சிறந்த பங்களிப்பை தர வேண்டும். மேலும் செஸ் விளையாட்டை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாட வேண்டும் என்று பிரக்ஞானந்தா கூறியுள்ளார்.
மேலும் விஸ்வநாதன் ஆனந்த் எங்களை பாராட்டி இருப்பதும் மகிழ்ச்சியை கொடுப்பதாக பிரக்ஞானந்தா தெரிவித்துள்ளார். இதனிடையே உலகக்கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிரக்ஞானந்தா முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் தமிழக அரசு அவருக்கு 30 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.