பெகு : உலகக்கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். இறுதி போட்டியில் முதல் இரண்டு சுற்றுகள் சமனில் முடிந்த நிலையில் டை பிரேக்கர் சுற்று வரை இறுதி ஆட்டம் சென்றது.
இதில் கார்ல்சன் ஒரு போட்டியில் வெற்றி, இரண்டாவது போட்டியில் சமன் ஆனார். இதன் மூலம் இரண்டரைக்கு ஒன்றரை என்ற புள்ளிகள் கணக்கில் கார்ல்சன் வெற்றி பெற்றார். எனினும் 32 வயதான கார்ல்சனை 18 வயதே ஆன பிரக்ஞானந்தா திணற வைத்த சம்பவம்தான் தற்போது செஸ் உலகில் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

சாதனை படைக்க வயது தேவையில்லை என்பதற்கு ஏதுவாக பிரக்ஞானந்தா தான் தனது இளம் வயதிலேயே உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரை சென்று இருப்பது பிரமிக்கத்தக்க ஒரு விஷயமாகும்.இதன் மூலம் உலக சாம்பியன் தொடரில் யார் போட்டியாளர் என்பதை தீர்மானிக்கக்கூடிய கண்டேன்டர் தொடரில் பிரக்ஞானந்தா தகுதி பெற்றிருக்கிறார்.
இதன் மூலம் இளம் வயதில் இந்தத் தொடருக்கு தகுதி பெற்ற நான்காவது வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்திருக்கிறார். இந்த தொடரில் உலகின் இரண்டாம் நிலை வீரர் நிக்காரு நக்குமுறா மற்றும் உலகின் மூன்றாம் நிலை வீரர் ஃபேபியனோ கரோனா ஆகியோரை வீழ்த்தி இனி செஸ் உலகின் அடுத்த அரசன் நான் தான் என்பதை நிரூபித்து இருக்கிறார்.
தற்போது பிரக்ஞானந்தாவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தாலும் அவர் ஆடிய விதம் கார்ல்சனையே திணற வைத்தது. எப்படி விஸ்வநாதன் ஆனந்தின் ஆதிக்கத்தை கார்ல்சன் முடிவுக்கு கொண்டு வந்தாரோ தற்போது கார்ல்சனின் ஆதிக்கத்தை மற்றொரு தமிழக வீரரான பிரக்ஞானந்தா முடிவுக்கு கொண்டு வர இருக்கிறார்.
பிரக்ஞானந்தா 18 வயது மட்டுமே ஆவதால் இன்னும் சில ஆண்டுகளில் அவர் பல சாதனைகளைப் படைக்க வாய்ப்பு இருக்கிறது. பிரக்ஞானந்தா மட்டுமல்லாமல் மற்றொரு தமிழக வீரரான முகேஷும் பெரிய அளவில் சாதித்து வருகிறார். இதனால் செஸ் விளையாட்டின் அடுத்த தலைநகரம் தமிழகமாக இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமே இல்லை.