பெகு : உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்றுகள் நடந்தன. இதில் முதல் சுற்றில் 35வது நகர்த்தலிலும், 2வது சுற்றில் 30 வது நகர்த்தலிலும் ஆட்டம் சமனில் முடிவடைந்தன. இந்த நிலையில் சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் டை பிரேக்கர் சுற்று பற்றி காண்போம்.

கிரிக்கெட்டில் நாம் ஸ்கோர் கார்டு வைத்து போட்டி எப்படி செல்கிறது என்று பார்ப்போம். பவுண்டரி, சிக்சர், ரன் அவுட், கேட்ச் என அனைத்து ரூல்சும் தெரியும். இதே போல் கால்பந்து ரூல்ஸ் மற்றும் ஸ்கோர் விவரம் குறித்தும் நமக்கு தெரியும். ஆனால் செஸ் போட்டிக்கு எப்படி புள்ளி வழங்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?
அது பெரிய கம்பு சுத்துகிற கதை எல்லாம் கிடையாது. ரொம்ப ஈஸி தான். செஸ் போட்டியில் ராஜாவை காப்பாற்றுவதே போட்டியாகும். ராஜாவுக்கு செக் வைத்து, அதிலிருந்து தப்பிக்க முடியவில்லை என்றால் போட்டியில் வெற்றி தோல்வி முடிவு செய்யப்படும். அப்படி வெற்றி பெற்றால் 1 புள்ளி வழங்கப்படும்.
எப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட்டம் சமனில் முடிவடைகிறதோ, அதே போல் செஸ் ஆட்டத்திலும், ஒரு கட்டத்திற்கு மேல் ராஜாவை குறிவைக்க முடியாது என்று தெரிந்தால் போட்டி சமனில் முடிவடையும். அப்படி போட்டி டிராவானால் இருவருக்கும் அரை புள்ளிகள் வழங்கப்படும்.
தற்போது, இறுதிச் சுற்றில் இரண்டு ரவுண்டும் டிராவானதால் தற்போது இருவரும் 1 -1 என்ற புள்ளிகள் கணக்கில் உள்ளனர். இதே போன்று இன்று டை பிரேக்கர் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு டை பிரேக்கர் ரவுண்டிலும் 2 ஆட்டங்கள் நடைபெறும். இதிலும் வெற்றி பெற்றால் ஒரு புள்ளி, சமனில் முடிந்தால் அரை புள்ளிகள் வழங்கப்படும்.
டை பிரேக்கரின் முதல் ரவுண்டில், இரு ஆட்டத்தில் வெற்றியை பிரக்ஞானந்தா பெற்றால், 3க்கு 1 என்ற கணக்கில் வெல்வார். அதே சமயம். ஒரு ஆட்டத்தில் வெற்றி மறு ஆட்டத்தில் சமன் அடைந்தால் இரண்டரைக்கு ஒன்று என்ற கணக்கில் பிரக்ஞானந்தா வெற்றி பெறுவார்.
மாறாக இருவரும் டிரா அல்லது ஒரு ஆட்டத்தில் ஒருவர் வெற்றி, மறு ஆட்டத்தில் தோல்வி என்று போட்டி நகர்ந்தால், 4வது டை பிரேக்கரில் ஒரு ஆட்டம் தான் நடைபெறும். அதில் யார் வெல்வார்களோ அவர்கள் வெற்றியாளர் என்று அறிவிக்கப்படுவார்கள்.இது டைபிரேக்ர் என்பதால், முதல் ரவுண்டில் இரு ஆட்டமும் 25 நிமிடமும், 2வது ரவுண்ட் 10 நிமிடமும், 3வது ரவுண்ட் 5 நிமிடமும் நடைபெறும். 4வது ரவுண்ட் 3 நிமிடமும் நடைபெறும்.