பெக்கு: செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா - மேக்னஸ் கார்ல்சன் இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்துள்ளது. இதனால் நாளைய ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
செஸ் உலகக்கோப்பை தொடர் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா காலிறுதியில் சக இந்தியரான அர்ஜூனை வீழ்த்தி அரையிறுதியில் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்னொரு பக்கம் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

இவர்கள் இருவருக்கும் இடையிலான ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. குறிப்பாக இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்திற்கு பின் செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்துள்ளர். இதனால் அரசியல் பிரபலங்கள், சினிமா நடிகர்கள் உட்பட பலரும் பிரக்ஞானந்தாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் பிரக்ஞானந்தா - கார்ல்சன் இடையிலான முதல் சுற்று இறுதிப்போட்டி தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா நிதானமாக ஆடினார். சரியாக சொல்ல வேண்டுமென்றால், கார்ல்சன் நகர்வுகள் வழியாக எழுப்பிய கேள்விகளுக்கு பிரக்ஞானந்தா சரியான பதில்களை கொடுத்து கொண்டே வந்தார்.
பிரக்ஞானந்தா தனது 18வது நகர்வில் கார்ல்சனின் ராணியை தூக்க, அடுத்த நகர்விலேயே பிரக்ஞானந்தாவின் ராணியை கார்ல்சன் தூக்கினார். கறுப்பு காய்களுடன் ஆடிய கார்ல்சன் முதல் சுற்றில் டிரா செய்யக் கூடாது என்ற முனைப்புடன் ஆடினார். ஆனால் எந்த சூழலிலும் பொறுமையை இழக்காத பிரக்ஞானந்தா, ஆட்டத்தை டிராவில் முடித்தார்.
முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிவடைந்ததால், நாளை நடக்கவுள்ள இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்று ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஒருவேளை நாளைய ஆட்டமும் டிராவில் முடிவடைந்ததால், நாளை மறுநாள் டை பிரேக்கர் மூலமாக வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.