காமன்வெல்த் 2026.. தங்கம் வென்று சாதனை படைத்த திலீப் காவித்.. முகமது பாசில், ஸ்ரீசங்கருக்கு வெள்ளி
கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய வீரர்கள் ஜூலை 29 அன்று அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளப் போட்டியில் திலீப் மகாது காவித் மற்றும் முகமது பாசில் ஜோடி தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஆண்களுக்கான 100 மீட்டர் டி47 ஓட்டப்பந்தயத்தில் திலீப் காவித் 10.71 வினாடிகளில் இலக்கை எட்டி, புதிய காமன்வெல்த் சாதனையை படைத்ததோடு தங்கப் பதக்கத்தையும் வென்றார். இது நடப்பு தொடரில் இந்தியாவின் 3-வது தங்கம் ஆகும். மற்றொரு இந்திய வீரரான முகமது பாசில் 10.83 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். முன்னதாக மீராபாய் சானு மற்றும் ஷர்மிளா ஆகியோர் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீளம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரரான முரளி ஸ்ரீசங்கர் 8.09 மீட்டர் தூரம் தாண்டி, காமன்வெல்த் அரங்கில் தனது இரண்டாவது வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார். ஜமைக்காவின் தாஜே கெய்ல் 8.15 மீட்டர் தூரம் தாண்டி தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரர் லோகேஷ் சத்யநாதன் 7.97 மீட்டர் தூரம் தாண்டி 5-வது இடத்தைப் பிடித்தார்.
குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் தொடர்ந்தது. சாக்ஷி சவுத்ரி, அருந்ததி சவுத்ரி, சச்சின் சிவாச், அங்குஷ் பங்கல், நரேந்தர் பெர்வால் மற்றும் ஜாஸ்மின் லம்போரியா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்று, இந்தியாவிற்கு மேலும் 6 பதக்கங்களை உறுதி செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய அணி நடப்பு காமன்வெல்த் தொடரில் குத்துச்சண்டை பிரிவில் மட்டும் குறைந்தது 10 பதக்கங்களை உறுதி செய்துள்ளது. இதன் மூலம், கடந்த 2022 பர்மிங்காம் காமன்வெல்த் தொடரில் குத்துச்சண்டையில் வென்ற பதக்க எண்ணிக்கை சாதனையை முறியடித்துள்ளது. இந்த பத்தில் எத்தனை தங்கம், வெள்ளி, வெண்கலம் என்பது மட்டுமே தற்போதைய கேள்வியாக உள்ளது. அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டிகளின் முடிவில் அது உறுதியாகும்.
மேலும் தடகளப் போட்டியில், அனிமேஷ் குஜூர் 20.46 வினாடிகளில் இலக்கை எட்டி 200 மீட்டர் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். குண்டு எறிதலில் தஜிந்தர்பால் சிங் தூர் மற்றும் சமர்தீப் சிங் கில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினர்.
லான் பௌல்ஸ் பிரிவில் நவநீத் சிங், தினேஷ் குமார் இணையும், மகளிர் ஒற்றையர் பிரிவில் நயன்மோனி சைகியாவும் அபார வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். அதே நேரத்தில், மகளிர் குண்டு எறிதலில் மன்பிரீத் கவுர் மற்றும் நீச்சலில் சுயாஷ் யாதவ் ஆகியோர் நூலிழையில் பதக்க வாய்ப்பை தவறவிட்டு 4-வது இடம்பிடித்தனர்.


Click it and Unblock the Notifications
