காமன்வெல்த் தொடரில் இருந்து 3 இந்திய வீரர்கள் அதிரடி நீக்கம்.. ஊக்கமருந்து விவகாரத்தால் பின்னடைவு
கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஊக்கமருந்து விவகாரத்தால் 2 இந்திய வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஒரு வீராங்கனை கடந்த 12 மாதங்களில் மூன்று முறை தனது இருப்பிடத்தை தெரிவிக்கத் தவறியதால் நீக்கப்பட்டார்.
ஜூடோ வீரர் அருண் குமார் இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (NADA) பரிசோதனையில் தோல்வியடைந்ததை அடுத்து, தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். 73 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்க இருந்த இவர், சர்வதேச அளவில் பல தங்கப் பதக்கங்களை வென்றவர் என்பதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது.

மற்றொரு சம்பவமாக, பளுதூக்கும் வீரர் தில்பாக் சிங்கும் கிளாஸ்கோவில் இருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இவர் நேரடியாக ஊக்கமருந்து சோதனையில் சிக்கவில்லை என்றாலும், இந்திய பளுதூக்கும் வீரர்கள் கடந்த ஜூன் 1, 2025 முதல் ஜூலை 22, 2026 வரையிலான காலகட்டத்தில் 5 முறை ஊக்கமருந்து சோதனைகளில் சிக்கியுள்ளனர்.
காமன்வெல்த் விதிகளின்படி, தொடர் விதிமீறல்களால் இந்திய பளுதூக்கும் அணியின் தகுதி இடங்கள் 16-லிருந்து 11 ஆகக் குறைக்கப்பட்டன. இதனால் ஏற்கனவே முதுகில் காயமடைந்திருந்த தில்பாக் சிங் அணியிலிருந்து விலக்கப்பட்டார்.
இந்த இரு வீரர்களின் நீக்கத்தால் காமன்வெல்த் தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் எண்ணிக்கை 126-லிருந்து 124 ஆகக் குறைந்துள்ளது. இவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களைச் சேர்க்க காமன்வெல்த் விதிகள் அனுமதிக்காது.
அடுத்து 2022 காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஜூடோ வீராங்கனை துலிகா மான், தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும், தற்போது நடைபெற்று வரும் கிளாஸ்கோ காமன்வெல்த் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கடந்த 12 மாதங்களில் மூன்று முறை தனது இருப்பிடம் குறித்த தகவலைத் தெரிவிக்கத் தவறியதால் (whereabouts failures), தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை (NADA) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
துலிகா மான் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பர்மிங்காம் காமன்வெல்த் தொடரின் 78 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதனால் இந்த கிளாஸ்கோ தொடரிலும் அவர் பதக்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்திய ஜூடோ அணியின் போட்டிகள் ஜூலை 31 அன்று தொடங்கவுள்ளதால், நீக்கப்பட்ட ஜூடோ வீரர்கள் அருண் குமார் மற்றும் துலிகா மான் இன்னும் கிளாஸ்கோவிற்கு புறப்படவில்லை. மற்ற ஜூடோ வீரர்கள் அனைவரும் ஜூலை 27 அன்று புறப்படத் திட்டமிட்டுள்ளனர்.
இது குறித்துப் பேசிய மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "ஊக்கமருந்து கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க, ஊக்கமருந்து பயன்படுத்துவதைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவர அரசு திட்டமிட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications

