காமன்வெல்த் 2026.. ஒரே நாளில் 16 பதக்கங்களை வாரிக்குவித்த இந்தியா.. குத்துச்சண்டையில் தங்க மழை
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர்கள் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெற்ற பத்தாம் நாள் போட்டிகளில், இந்திய வீரர்கள் குத்துச்சண்டை, தடகளம் மற்றும் ஜூடோ ஆகிய விளையாட்டுகளில் 16 பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர். இதில் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும்.
இதில் பெருமளவில் பதக்கங்களை வாரி வழங்கியது குத்துச்சண்டை வீரர்கள்தான். குத்துச்சண்டையில் மட்டுமே இந்தியாவுக்கு 7 தங்கப் பதக்கங்களும், 3 வெள்ளிப் பதக்கங்களும் கிடைத்துள்ளன. மகளிர் 54 கிலோ எடைப்பிரிவில் பிரீத்தி பவார், கொலம்பியாவின் வலேரியாவை வீழ்த்தி தங்கப் பதக்க வேட்டையைத் தொடங்கி வைத்தார். அவரைத் தொடர்ந்து, மகளிர் 57 கிலோ பிரிவில் ஜெய்ஸ்மின் லம்போரியா, ஆஸ்திரேலிய வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்றார்.

இதேபோல், மகளிர் 51 கிலோ எடைப்பிரிவில் சாக்ஷி சவுத்ரி, 70 கிலோ எடைப்பிரிவில் அருந்ததி சவுத்ரி மற்றும் 60 கிலோ பிரிவில் பிரியா கங்காஸ் ஆகியோரும் தங்கம் வென்று அசத்தினர். ஆண்கள் பிரிவில், 60 கிலோ எடைப்பிரிவில் களமிறங்கிய சச்சின் சிவாச், நமீபியா வீரருக்கு எதிராக அபாரமாக விளையாடி 3-2 என்ற கணக்கில் தங்கம் வென்றார்.
80 கிலோ பிரிவில் அங்குஷ் பங்கல் இங்கிலாந்து வீரரை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவின் 7வது குத்துச்சண்டை தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். லவ்லினா போர்கோஹெய்ன், நரேந்தர் பெர்வால் மற்றும் ஜடுமணி சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
தடகளம் மற்றும் ஜூடோ பிரிவில் பதக்கங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கான குண்டு எறிதல் போட்டியில் சோமன் ராணா 13.40 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். மற்றொரு இந்திய வீரரான சுபம் ஜூயல் 13.28 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் பிரவீன் சித்ரவேல் 16.58 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளியும், செல்வ பிரபு திருமாறன் 16.52 மீட்டர் தூரம் தாண்டி வெண்கலப் பதக்கமும் வென்றனர். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கும் பெருமை தேடித் தந்தனர். ஜூடோவில் மகளிர் 63 கிலோ எடைப்பிரிவில் உன்னதி சர்மா வெறும் 1 நிமிடமும் 7 விநாடிகளிலும் எதிராளியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
குல்வீர் சிங்கின் புதிய சாதனை
ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குல்வீர் சிங் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒரே காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 5000 மீட்டர் பிரிவில் வெண்கலமும் மற்றும் 10000 மீட்டர் பிரிவில் வெள்ளியும் என இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியத் தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை குல்வீர் சிங் படைத்துள்ளார்.
தற்போது இந்தியா மொத்தம் 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என 39 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் நீடிக்கிறது.
ஆகஸ்ட் 1 அன்று பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் பட்டியல்:
- பிரீத்தி பவார் - தங்கம் (மகளிர் 54 கிலோ குத்துச்சண்டை)
- ஜெய்ஸ்மின் லம்போரியா - தங்கம் (மகளிர் 57 கிலோ குத்துச்சண்டை)
- சாக்ஷி சவுத்ரி - தங்கம் (மகளிர் 51 கிலோ குத்துச்சண்டை)
- பிரியா கங்காஸ் - தங்கம் (மகளிர் 60 கிலோ குத்துச்சண்டை)
- அருந்ததி சவுத்ரி - தங்கம் (மகளிர் 70 கிலோ குத்துச்சண்டை)
- சச்சின் சிவாச் - தங்கம் (ஆண்கள் 60 கிலோ குத்துச்சண்டை)
- அங்குஷ் பங்கல் - தங்கம் (ஆண்கள் 80 கிலோ குத்துச்சண்டை)
- சோமன் ராணா - தங்கம் (ஆண்கள் குண்டு எறிதல் F57 மாற்றுத்திறனாளிகள் தடகளம்)
- பிரவீன் சித்ரவேல் - வெள்ளி (ஆண்கள் முப்பரிமாண தாண்டுதல்)
- ஜடுமணி சிங் - வெள்ளி (ஆண்கள் 55 கிலோ குத்துச்சண்டை)
- சுபம் ஜூயல் - வெள்ளி (ஆண்கள் குண்டு எறிதல் F57 மாற்றுத்திறனாளிகள் தடகளம்)
- லவ்லினா போர்கோஹெய்ன் - வெள்ளி (மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை)
- நரேந்தர் பெர்வால் - வெள்ளி (ஆண்கள் 90 கிலோ பிளஸ் குத்துச்சண்டை)
- செல்வ பிரபு திருமாரன் - வெண்கலம் (ஆண்கள் முப்பரிமாண தாண்டுதல்)
- உன்னதி சர்மா - வெண்கலம் (மகளிர் 63 கிலோ ஜூடோ)
- குல்வீர் சிங் - வெண்கலம் (ஆண்கள் 5000 மீட்டர் தடகளம்)
காமன்வெல்த் 2026 - முதல் 10 நாடுகளின் பதக்கப் பட்டியல் (ஆகஸ்ட் 1 முடிவில்):
- ஆஸ்திரேலியா - தங்கம்: 65 - வெள்ளி: 41 - வெண்கலம்: 52 - மொத்தம்: 158
- இங்கிலாந்து - தங்கம்: 26 - வெள்ளி: 40 - வெண்கலம்: 35 - மொத்தம்: 101
- கனடா - தங்கம்: 18 - வெள்ளி: 20 - வெண்கலம்: 21 - மொத்தம்: 59
- இந்தியா - தங்கம்: 13 - வெள்ளி: 17 - வெண்கலம்: 9 - மொத்தம்: 39
- ஸ்காட்லாந்து - தங்கம்: 13 - வெள்ளி: 8 - வெண்கலம்: 17 - மொத்தம்: 38
- நைஜீரியா - தங்கம்: 10 - வெள்ளி: 7 - வெண்கலம்: 6 - மொத்தம்: 23
- ஜமைக்கா - தங்கம்: 9 - வெள்ளி: 3 - வெண்கலம்: 5 - மொத்தம்: 17
- நியூசிலாந்து - தங்கம்: 8 - வெள்ளி: 11 - வெண்கலம்: 9 - மொத்தம்: 28
- வேல்ஸ் - தங்கம்: 8 - வெள்ளி: 10 - வெண்கலம்: 12 - மொத்தம்: 30
- மலேசியா - தங்கம்: 8 - வெள்ளி: 3 - வெண்கலம்: 3 - மொத்தம்: 14


Click it and Unblock the Notifications
