2026 காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள் பட்டியல்.. 39 பதக்கங்களுடன் இந்தியா 4-வது இடம்
கிளாஸ்கோ: 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தன. இந்தத் தொடரில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன் மற்றும் ஹாக்கி போன்ற இந்தியாவுக்கு பதக்க வாய்ப்புள்ள விளையாட்டுகள் இம்முறை காமன்வெல்த் போட்டிகளில் சேர்க்கப்படாத நிலையிலும், இந்திய வீரர்கள் சவால்களை முறியடித்து இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளனர்.
இந்த முறை பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா 70 தங்கம் உட்பட 171 பதக்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்தது. இங்கிலாந்து 110 பதக்கங்களுடன் 2-வது இடத்தையும், கனடா 62 பதக்கங்களுடன் 3-வது இடத்தையும் பிடித்தன. இந்தியாவும் போட்டியை நடத்திய ஸ்காட்லாந்தும் தலா 39 பதக்கங்களை வென்றிருந்தாலும், ஸ்காட்லாந்தை விட இந்தியா அதிக வெள்ளிப் பதக்கங்களை (17 வெள்ளி) வென்றிருந்ததால் 4-வது இடத்தைக் கைப்பற்றியது.

தடகளப் பிரிவில் அபார பதக்க வேட்டை
இந்தியாவிற்கு தடகளம் மற்றும் பாராகளுக்கான தடகளப் பிரிவில் அதிகபட்சமாக 16 பதக்கங்கள் (3 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கலம்) கிடைத்தன. ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரன் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றார். பாராகளுக்கான தடகளத்தில் திலீப் மகாது காவித், ஷர்மிளா மற்றும் சோமன் ராணா ஆகியோர் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். குல்வீர் சிங் 10000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளியும், 5000 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலமும் வென்று அசத்தினார்.
குத்துச்சண்டையில் தங்க மழை
குத்துச்சண்டை போட்டிகளில் இந்திய வீரர்கள் தங்களது அசாத்திய ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர். இந்தியா வென்ற 13 தங்கப் பதக்கங்களில் 7 தங்கப் பதக்கங்களை குத்துச்சண்டை வீரர்கள் மட்டுமே வென்று தந்தனர். அங்குஷ், சச்சின், அருந்ததி சவுத்ரி, பிரியா, சாக்ஷி சவுத்ரி, ஜாஸ்மின் லம்போரியா மற்றும் பிரீத்தி பவார் ஆகியோர் தத்தமது பிரிவுகளில் சாம்பியன் பட்டம் வென்று தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.
பளுதூக்குதல் மற்றும் ஜூடோ
பளுதூக்குதல் போட்டிகளில் இந்தியாவிற்கு 9 பதக்கங்கள் கிடைத்தன. ஒலிம்பிக் பதக்க வீராங்கனை மீராபாய் சானு மகளிர் 48 கிலோ பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். மேலும் பளுதூக்குதலில் 7 வெள்ளி மற்றும் 1 வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.
ஜூடோ போட்டிகளில் ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே ஆகியோர் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தனர். யாமினி மௌரியா வெள்ளியும், உன்னதி சர்மா வெண்கலமும் வென்றனர். பாராகளுக்கான பளுதூக்குதலில் ஜந்து குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆகஸ்ட் 1 குவிந்த பதக்கங்கள்
காமன்வெல்த் விளையாட்டின் 9-வது நாளான ஆகஸ்ட் 1 அன்று மட்டும் இந்தியா ஒரே நாளில் 18 பதக்கங்களை வென்று உலக நாடுகளை வியக்க வைத்தது. குத்துச்சண்டையில் 7 தங்கம், தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் வெள்ளி உட்பட 7 பதக்கங்கள் என மொத்தம் 18 பதக்கங்கள் அன்று ஒரே நாளில் இந்தியாவிற்கு கிடைத்தன.
கடைசி நாளான நேற்று இந்தியாவிற்கு பதக்கங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஜூடோவில் 19 வயதான இஷ்ரூப் நரங் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கனடாவின் கோராலியிடம் தோல்வியடைந்து 4-வது இடமே பிடித்தார். சைக்கிள் பந்தயத்தில் ரொனால்டோ சிங் 20-வது இடத்தையும், லீஷா தாஸ் 6-வது இடத்தையும் பிடித்தனர்.
இத்துடன் இந்தியாவின் கிளாஸ்கோ காமன்வெல்த் ஆட்டம் நிறைவடைந்தது. நிறைவு விழாவின் போது காமன்வெல்த் கொடி அதிகாரப்பூர்வமாக இந்தியத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த 2030-ம் ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டின் 100-வது ஆண்டு பதிப்பை இந்தியாவின் அகமதாபாத் நகரம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
2026 காமன்வெல்த் விளையாட்டில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் முழுமையான பட்டியல்:
தங்கப் பதக்கம் வென்றவர்கள் (13)
- பளுதூக்குதல்: சாய்கோம் மீராபாய் சானு (மகளிர் 48 கிலோ)
- பாரா தடகளம்: ஷர்மிளா தங்கர் (மகளிர் குண்டு எறிதல் எஃப்57)
- பாரா தடகளம்: திலீப் மகாது காவித் (ஆண்கள் 100 மீட்டர் டி47)
- பாரா தடகளம்: சோமன் ராணா (ஆண்கள் குண்டு எறிதல் எஃப்57)
- ஜூடோ: அஸ்மிதா டே (மகளிர் 48 கிலோ)
- ஜூடோ: ஹர்ஷ் சிங் (ஆண்கள் 60 கிலோ)
- குத்துச்சண்டை: சாக்ஷி சவுத்ரி (மகளிர் 51 கிலோ)
- குத்துச்சண்டை: பிரீத்தி பவார் (மகளிர் 54 கிலோ)
- குத்துச்சண்டை: ஜாஸ்மின் லம்போரியா (மகளிர் 57 கிலோ)
- குத்துச்சண்டை: பிரியா கங்காஸ் (மகளிர் 60 கிலோ)
- குத்துச்சண்டை: அருந்ததி சவுத்ரி (மகளிர் 70 கிலோ)
- குத்துச்சண்டை: சச்சின் சிவாச் (ஆண்கள் 60 கிலோ)
- குத்துச்சண்டை: அங்குஷ் பங்கல் (ஆண்கள் 80 கிலோ)
வெள்ளிப் பதக்கம் வென்றவர்கள் (17)
- பளுதூக்குதல்: ரிஷிகாந்தா சிங் (ஆண்கள் 60 கிலோ)
- பளுதூக்குதல்: முத்துப்பாண்டி ராஜா (ஆண்கள் 65 கிலோ)
- பளுதூக்குதல்: ஞானேஸ்வரி யாதவ் (மகளிர் 53 கிலோ)
- பளுதூக்குதல்: ஹர்ஜிந்தர் கவுர் (மகளிர் 69 கிலோ)
- பளுதூக்குதல்: வல்லூரி அஜய் பாபு (ஆண்கள் 79 கிலோ)
- பளுதூக்குதல்: லவ்பிரீத் சிங் (ஆண்கள் +110 கிலோ)
- தடகளம்: சர்வேஷ் அனில் குஷாரே (ஆண்கள் உயரம் தாண்டுதல்)
- தடகளம்: குல்வீர் சிங் (ஆண்கள் 10,000 மீட்டர்)
- தடகளம்: முரளி ஸ்ரீசங்கர் (ஆண்கள் நீளம் தாண்டுதல்)
- தடகளம்: நீரஜ் சோப்ரா (ஆண்கள் ஈட்டி எறிதல்)
- தடகளம்: பிரவீன் சித்ரவேல் (ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப்)
- பாரா தடகளம்: முகமது பாசில் (ஆண்கள் 100 மீட்டர் டி47)
- பாரா தடகளம்: சுபம் ஜூயல் (ஆண்கள் குண்டு எறிதல் எஃப்57)
- ஜூடோ: யாமினி மௌரியா (மகளிர் 57 கிலோ)
- குத்துச்சண்டை: ஜடுமணி சிங் (ஆண்கள் 55 கிலோ)
- குத்துச்சண்டை: லவ்லினா போர்கோஹெய்ன் (மகளிர் 75 கிலோ)
- குத்துச்சண்டை: நரேந்தர் பெர்வால் (ஆண்கள் +90 கிலோ)
வெண்கலப் பதக்கம் வென்றவர்கள் (9)
- பாரா பளுதூக்குதல்: ஜந்து குமார் (ஆண்கள் ஹெவிவெயிட்)
- பளுதூக்குதல்: பிந்தியாராணி தேவி (மகளிர் 58 கிலோ)
- பாரா தடகளம்: ஷில்பா ஷைலா (மகளிர் குண்டு எறிதல் எஃப்57)
- தடகளம்: குல்வீர் சிங் (ஆண்கள் 5,000 மீட்டர்)
- தடகளம்: சீமா கல்ராமனா (மகளிர் வட்டு எறிதல்)
- தடகளம்: யஷ்வீர் சிங் (ஆண்கள் ஈட்டி எறிதல்)
- தடகளம்: செல்வ பிரபு திருமாறன் (ஆண்கள் ட்ரிபிள் ஜம்ப்)
- தடகளம்: தேஜஸ்வின் சங்கர் (ஆண்கள் டெகத்லான்)
- ஜூடோ: உன்னதி சர்மா (மகளிர் 63 கிலோ)


Click it and Unblock the Notifications
