காமன்வெல்த் போட்டி 2026: சரித்திரம் படைத்த ஷர்மிளா.. போலியோ பாதிப்பு முதல் குடும்ப வன்முறை வரை
கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்று இந்தியாவின் ஷர்மிளா தங்கர் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். குண்டு எறிதல் F57 பிரிவில் தங்கம் வென்றதன் மூலம், காமன்வெல்த் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் தடகள மாற்றுத்திறனாளி வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 40 வயதான அவர், தனது பல ஆண்டுகால கடுமையான போராட்டங்களை முறியடித்து இந்த இமாலய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
பெண்களுக்கான குண்டு எறிதல் எஃப்57 இறுதிப் போட்டியில், ஷர்மிளா தனது மிகச்சிறந்த வீச்சான 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து இந்த வெற்றியைப் பெற்றார். இதன்மூலம் காமன்வெல்த் மாற்றுத்திறனாளி தடகளப் போட்டிகளில் பதக்கத்திற்காக இந்தியா பல ஆண்டுகள் காத்திருப்புக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஹரியானாவின் மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள சித்ரோலி என்ற கிராமத்தில் இருந்து கிளாஸ்கோ விளையாட்டு மேடை வரையிலான ஷர்மிளாவின் பயணம் எளிதானதாக இருக்கவில்லை. விவசாயியான அவரது தந்தைக்குக் குறைந்த அளவிலான நிலமே இருந்ததால், சிறுவயதில் கடுமையான வறுமையில் வாடினார். அவரது தாயார் பார்வையற்றவர். ஷர்மிளாவின் குடும்பத்தில் மூன்று பெண் குழந்தைகளில் அவர் இரண்டாவதாகப் பிறந்தார். அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது போலியோ பாதிப்பு ஏற்பட்டு, அவரது இடது கால் நிரந்தரமாகச் செயலிழந்தது.
போலியோ பாதிப்பு அவரது வாழ்க்கையின் முதல் சவாலாக மட்டுமே இருந்தது. பத்தாம் வகுப்பு முடித்த உடனேயே அவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால், அவரது முதல் திருமணம் பெரும் துயரமாக அமைந்தது. அவரது கணவர் மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, ஷர்மிளாவை வரதட்சணை கேட்டுத் துன்புறுத்தினார். மேலும், இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தற்காக அவரை அடித்து சித்திரவதை செய்தார்.
"அவர் தினமும் மது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திவிட்டு என்னை சித்திரவதை செய்வார். வயலில் வேலை செய்து, மாடுகளையும் கவனித்துக் கொண்டாலும் அவருக்கு அது திருப்தி தரவில்லை. முதலில் வரதட்சணைக்காக என்னை அடித்தார், பின்னர் இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததற்காக என்னை அடித்தார். எனக்கு 26 வயதாக இருந்தபோது, அண்டை வீட்டாருக்கு முன்னால் என்னை அடித்து, ஆடைகளைக் களைந்து அவமானப்படுத்தி, இரண்டு பெண் குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன் பிறகே என் பெற்றோர் என்னை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்" என்று ஷர்மிளா தனது கடந்த காலத் துயரங்களைப் பகிர்ந்துள்ளார்.
அதன் பிறகு, தனது கிராமத்திற்கு அருகிலுள்ள பெண்கள் மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளராகவும், காவலராகவும் ஷர்மிளா வேலை செய்யத் தொடங்கினார். குறைவான வருமானம் என்றாலும், அது அவரது மன அழுத்தத்தில் இருந்து மீள உதவியது.ஷர்மிளாவின் வாழ்வில் 28 ஆவது வயதில் ஏற்பட்ட திருப்புமுனை அவரது வாழ்க்கையையே மாற்றியது. அவரது இரண்டாவது கணவரான அஜித் சிங், ஷர்மிளாவையும் அவரது மகள்களையும் அன்போடு ஏற்றுக்கொண்டார்.
அவர்களை ரேவாரிக்கு அழைத்துச் சென்று, ஷர்மிளாவை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்குமாறு ஊக்குவித்தார். அஜித் சிங்கின் ஆதரவும், ஷர்மிளாவின் கடுமையான உழைப்பும் இன்று அவரை கிளாஸ்கோ மைதானத்தில் உலகமே வியக்கும் வண்ணம் பதக்கம் வெல்ல வைத்து சாதனை படைக்க வழிவகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications

