காமன்வெல்த் விளையாட்டு.. ஒரே நாளில் 6 பதக்கங்களை உறுதி செய்ய வாய்ப்பு.. ஹாக்கியில் அசத்தல்
பிர்மிங்காம் : 2022ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் இன்று பதக்க வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்திய அணி 6வது நாள் தொடக்கத்தில் 5 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 13 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், மகளிருக்கான ஹாக்கி போட்டியில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்திய மகளிர் அணி கனடாவை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3க்கு2 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இதே போன்று குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 5 பதக்கத்தை உறுதி செய்ய வாய்ப்பை கிடைத்தது. மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் நித்து கங்காஸ், அயர்லாந்து வீராங்கனை நிக்கோலை எதிர்கொண்டு அதிரடியாக தாக்கினார்.
இதனால் நிக்கோல் நிலைக்குலைந்து போக ஆட்டத்திலிருந்து அவர் பாதியிலிருந்து விலகினார். இதன் மூலம் நித்து கங்காஸ்க்கு பதக்கம் உறுதியாகியுள்ளது. ஆடவருக்கான 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன் நமிபியா வீரரை 4க்கு1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி 2வது பதக்கத்தை உறுதி செய்தார்.
இவர் கடந்த முறை காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இந்திய வீராங்கனைகள் லவ்வினா, நிகாத் சரின் மற்றும் ஆஷிஸ் குமார் நள்ளிரவில் போட்டியிடுகின்றனர். இதில், அவர்கள் வெற்றி பெற்றால் மூவருக்கும் பதக்கம் உறுதி. குத்துச்சண்டையின் அரையிறுதி ஆட்டம் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெறும். இதனிடையே, ஜூடோ மகளிருக்கான 78 கலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை துலிகா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம். இன்று இரவு தங்கப் பதக்கத்திற்காக போட்டியிட உள்ளார்.


Click it and Unblock the Notifications