டெல்லி: காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக ஜிம்னாஸ்டிக்ஸில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது.
19 வயதேயாகும் இந்தியாவின் ஆசிஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இதுவரை இந்தியா பதக்கம் வாங்கவில்லையே என்ற பெரும் குறையை அவர் தீர்த்து விட்டார்.
இன்று நடைபெறும் வால்ட் பிரிவில் அவர் மேலும் ஒரு பதக்கத்தை குறி வைத்து தீவிரமாக உள்ளார்.
வெண்கலப் பதக்கம் வென்றது குறித்து ஆசிஷ் குமார்கூறுகையில், நான் தங்கத்தைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் வெண்கலம்தான் கிடைத்தது. இருப்பினும் ஒன்றும் இல்லை என்று போவதற்கு ஒரு பதக்கம் கிடைத்ததே பெரிதுதான் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், போட்டியின்போது நான் சற்று பதட்டத்துடன் இருந்தேன். அதேசமயம், தவறு செய்தால் பதக்கத்தை இழக்க நேரிடும் என்பதையும் உணர்ந்திரு்நதேன். ரசிகர்களின் ஆதரவுக் குரல்தான் என்னை உற்சாகப்படுத்தியது. இதனால் எனக்கு நம்பிக்கை அதிகரித்தது. சிறப்பாக செய்ய முயற்சித்தேன் என்றார்.
ஆசிஷ் இந்தியாவுக்காக சாதனையுடன் கூடிய பதக்கத்தைப் பெற்றது இது முதல் முறையல்ல. அவருக்கு 16 வயது இருந்தபோது ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று, ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.