இந்தியாவின் பதக்க வேட்டை தொடருகிறது-இன்று மேலும் ஒரு தங்கம் கிடைத்தது
டெல்லி: டெல்லி காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை சற்றும் தொய்வில்லாமல் தொடருகிறது. இன்று காலை துப்பாக்கிச் சுடுதலில் ஒரு தங்கம் வென்றது இந்தியா.
25 மீட்டர் சென்டர் பயர் பிஸ்டல் ஜோடிப் பிரிவில் இந்தியாவின் விஜய்க்குமார், ஹர்ப்ரீத் சிங் ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது. இது இந்தியாவுக்குக் கிடைத்துள்ள 21வது தங்கப் பதக்கமாகும்.
எதிர்பாராமல் கிடைத்த வெண்கலம்
அதேபோல, 20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் இந்தியாவின் ஹர்மீந்தர் சிங் எதிர்பாராத வகையில் வெண்கலப் பதக்கத்தை வென்று ஆச்சரியப்படுத்தினார். மணி நேரம் 23 நிமிடம் 28 விநாடியில் இந்த தூரத்தை அவர் கடந்தார்.
ஆஸ்திரேலியாவின் லியூக் ஆடம்ஸ் 2வது இடத்தைப் பிடித்தார். அவரை விட 1 நிமிடம் 10 விநாடிகள்தான் பின் தங்கினார் ஹர்மீந்தர்.
இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஜரேட் டேலன்ட் தங்கம் வென்றார்.
அதேசமயம் பெண்கள் நடைப் போட்டியில் (20 கிலோமீட்டர்) ராணி யாதவ் 6வது இடத்தையே பிடிக்க முடிந்தது.
சுமா-கவிதா ஜோடிக்கு வெண்கலம்
மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஜோடிப் பிரிவில் இந்தியாவின் சுமா, கவிதா ஜோடி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
ஆடவருக்கான குழு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா, நைஜீரியாவை 3-0 என்ற வெற்றிக் கணக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றது.


Click it and Unblock the Notifications